பனிப்பொழிவால் ரயில்கள் தாமதம்; பயணியருக்கு ரயில்வே அறிவுரை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'பனிக்காலம் என்பதால், வடமாநில ரயில்களில் சில நேரங்களில் தாமதம் ஏற்படலாம்; பயணியர் வீட்டில் இருந்து புறப்படும் முன், ரயில் நேரத்தை சரிபார்த்துக் கொள்ளுங்கள்' என, ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.வடமாநிலங்களில் பனிப்பொழிவு அதிகம் உள்ளது. ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், ஹரியானா, டில்லி, ராஜஸ்தான் மாநிலங்களில், இயல்பு நிலையை பாதிக்கும் அளவிற்கு குளிர் நிலவுகிறது. இதனால், விமானங்கள், ரயில்களின் சேவையில் பாதிப்பு ஏற்படுகிறது. ரயில்கள் ரத்து செய்யப்படாவிட்டாலும், பல மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
புதுடில்லி மற்றும் ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. பயணியர் பாதுகாப்பை கருத்தில் வைத்து, சில வழித்தடங்களில் ரயில்கள் வேகம் குறைத்து இயக்கப்படும்.அதனால், ரயில்களின் வருகையில் தாமதம் ஏற்படுகிறது. சென்னை சென்ட்ரல் - ஷாலிமர் விரைவு ரயில், நேற்று முன்தினம் ஆறு மணி நேரமும், சென்ட்ரல் - நிஜாமுதீன் விரைவு ரயில், நான்கு மணி நேரமும் தாமதமாக இயக்கப்பட்டது. பனிக்காலம் என்பதால், சில ரயில்களில் தாமதம் ஏற்படலாம். எனவே, பயணியர் வீட்டில் இருந்து புறப்படும் முன், ரயில் நேரத்தை சரிபார்த்துக் கொள்ளுவது நல்லது. மேலும் '139' என்ற ரயில்வேயின் உதவி எண்ணை தொடர்பு கொண்டு தகவலை பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.