சென்னை: தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்களில், இன்று இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன் அறிக்கை: நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக துாத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், நீலகிரி மாவட்டம் கின்னக்கோரை பகுதிகளில், தலா 8 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், வளிமண்டல கீழடுக்குகளில், வடகிழக்கு பருவக்காற்று வீசுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில், வடகடலோர மாவட்டங்களில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட, 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும், நாளை இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்யலாம். தமிழகத்தின் பிற பகுதிகளில், நாளை இடி, மின்னலுடன், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன், லேசான மழை பெய்யலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.