உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பா.ம.க., அன்புமணியுடன் இணைந்த ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகள்

 பா.ம.க., அன்புமணியுடன் இணைந்த ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகள்

சென்னை: பா.ம.க., பிளவுபட்டிருந்தபோது, ராமதாஸ் நியமித்த கட்சி நிர்வாகிகள், தற்போது கட்சி ஒன்றிணைந்த நிலையில், அன்புமணி தலைமையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் கட்சி தலைவருமான அன்புமணி இடையே மோதல் இருந்தபோது, இருவரும் தனித்தனியே, கட்சி நிர்வாகிகளை நியமித்தனர். தற்போது, மோதல் முடிவுக்கு வந்து, இருவரும் சமரசமாகி உள்ளனர். இதையடுத்து, ராமதாஸ் நியமித்த மாநில, மாவட்ட நிர்வாகிகளையும், தான் நியமித்த நிர்வாகிகளையும் அன்புமணி தொடர்ந்து சந்தித்து வருகிறார். அந்த வகையில், சென்னை பனையூரில் உள்ள, பா.ம.க., அலுவலகத்தில், ராமதாசால் நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளை, அன்புமணி நேற்று சந்தித்தார். அவர்களிடம் அன்புமணி கூறியதாவது: தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்கு பிறகு, மாற்றம் நிகழ்ந்துள்ளது. நம்மிடம் ஏராளமான திறமைகளும், செயல்திட்டங்களும் உள்ளன. வரும் காலத்தில், ராமதாசின் கனவுகளை, செயல்திட்டங்களை செயல்படுத்துவோம். தேர்தலின்போது, என்னுடன் பயணம் செய்தவர்களும், ராமதாசுடன் பயணம் செய்தவர்களும் ஒருங்கிணைந்து, இனிமேல் செயல்பட வேண்டும். வரும் உள்ளாட்சி தேர்தலில், பா.ம.க.,வினர் உரிய பிரதிநிதித்துவம் பெற வேண்டும். செயலர், பொருளாளர், இளைஞரணி, மகளிர் அணி என, புதிய பட்டியல் தயார் செய்ய வேண்டும். அனைவருக்கும் உரிய அங்கீகாரம் தரப்படும். டிஜிட்டல் வடிவில், புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது; நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

 'மாஜி' எம்.எல்.ஏ., முழுக்கு

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தனி அணியாக செயல்பட்டபோது ராமதாஸ் ஆதரவாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ., அருள், சேலத்தில் நேற்று ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.பின், அருள் கூறியதாவது: ராமதாசை தலைவராக ஏற்று, அவருடன் பயணித்த எங்களை நடுத்தெருவில் நிறுத்தி விட்டார். கட்சியில் பிரிவு ஏற்படாவிட்டால், பா.ம.க., ஓட்டு வங்கி 2 சதவீதமாக சரிந்திருக்காது. என்னை பார்த்து சாக்கடை என வசை பாடுகிறார் அன்புமணி; மீண்டும் அங்கு செல்ல முடியாது.இந்த கூட்டத்தில், ராமதாஸ் படம், கட்சி கொடியை பயன்படுத்தவில்லை. வன்னியர்கள் ஏமாறக்கூடாது. அன்புமணி தலைமையை ஏற்க மாட்டோம். இனி பா.ம.க., இல்லை; புது கட்சியா, வேறு கட்சியில் இணைவதா என, ஆடி 18 முடிந்த பின் அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !