கோவையில் 2021ம் ஆண்டு பணிபுரிந்த 25 வயது பெண்ணுக்கும், உடற்கல்வி ஆசிரியர் மதுரை மாவட்டம் கே.ஆண்டிப்பட்டியை சேர்ந்த அஜித்குமார், 28, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது; பின், காதலாக மாறியது. 2023ம் ஆண்டு, பெண் தங்கியிருந்த விடுதிக்கு சென்ற அஜித்குமார், தன் பெற்றோர் கோவை ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள ஹோட்டலில் தங்கி இருப்பதாக கூறி அழைத்து சென்றார்.ஹோட்டலுக்கு சென்று, ஒரு அறையில் இருவரும் பெற்றோர் வருகைக்கு காத்திருந்தனர். அப்போது அஜித்குமார், பெண்ணுக்கு ஜூஸ் கொடுத்தார்; குடித்ததும் அவர் மயங்கினார். அப்போது அஜித்குமார் அவரை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்தார்.மயக்கம் தெளிந்து எழுந்த பெண்ணிடம் அஜித்குமார், 'பெற்றோர் இன்னும் வரவில்லை; மற்றொரு நாள் சந்திக்கலாம்' என்று விடுதிக்கு அழைத்துச் சென்றுவிட்டார். சில நாட்கள் கழித்து மீண்டும் அஜித்குமார், பெற்றோர் வந்துள்ளதாக கூறி, ஹோட்டலுக்கு அழைத்தார். ஆனால் அவர், உடன் செல்ல மறுத்து விட்டார்.ஆத்திரம் அடைந்த அஜித்குமார், ஹோட்டலில் அவரை பலாத்காரம் செய்த படங்கள் மற்றும் வீடியோக்களை காண்பித்து, சமூக வலைதளங்களில் அவற்றை வெளியிட்டு விடுவதாக மிரட்டினார். பயந்து போன பெண், மீண்டும் அஜித்குமாருடன் ஹோட்டலுக்கு சென்றார். அங்கு அஜித்குமார், அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி, பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அவர் கர்ப்பம் அடைந்தார்.சிறிது நாட்களுக்கு பின், தன் பெற்றோருடன் விடுதிக்கு சென்ற அஜித்குமார், அந்த பெண்ணிடம் பேசி, விரைவில் திருமணம் செய்வதாக நம்ப வைத்தார். பின், அவர்கள் மூவரும், அந்த பெண்ணை அன்னுாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்தனர்.அஜித்குமாரின் சுயரூபத்தை அறிந்த அந்த பெண், போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தார். இதையறிந்த அஜித்குமாரும், பெற்றோரும் அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது, 10 லட்சம் ரூபாய் கொடுத்தால், ஆபாச படங்கள், வீடியோக்களை அழித்து விடுவதாக அஜித்குமார் கூறினார்.இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், கோவை மத்திய மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து அஜித்குமார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.சிறுமிக்கு தாலி; நபருக்கு 'கம்பி'
அரியலுார் மாவட்டம், சாத்தம்பாடியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் விஜய், 22; கூலி தொழிலாளி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது வீட்டில் பெண் கேட்டார். சிறுமியின் வீட்டார் பெண் கொடுக்க மறுத்ததால், தன் பெற்றோர் உதவியுடன் கடத்தி, கட்டாயப்படுத்தி தாலி கட்டினார்.பின், தன் வீட்டுக்கு கடத்திச் சென்று, பலாத்காரம் செய்து, சிறுமியை பெற்றோர் வீட்டுக்கு அனுப்பினார். சிறுமியின் புகார்படி, ஜெயங்கொண்டம் போலீசார் நேற்று, விஜயை 'போக்சோ'வில் கைது செய்து, சிறையில் அடைத்தனர். போலீசார், தலைமறைவாக உள்ள விஜயின் குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.கனிமொழி பற்றி அவதுாறு; மாவட்ட பா.ஜ., நிர்வாகி கைது
துாத்துக்குடி தொகுதி தி.மு.க., - எம்.பி.,யான கனிமொழி, தி.மு.க.,வில் துணை பொதுச்செயலராகவும் உள்ளார். இவரை பற்றி, திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த பா.ஜ., பிரமுகரான ஆட்டோ டிரைவர் சீனிவாசன், 52, என்பவர், அவதுாறாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, ஸ்ரீரங்கம் தி.மு.க., வட்டச்செயலர் ஹரிஹரன் என்பவர் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிந்து, சீனிவாசனை நேற்று கைது செய்தனர். அவர், பா.ஜ.,வில் முன்னாள் மாநில அமைப்புசாரா அணி செயலராக இருந்தார். இப்போது, மாவட்ட செயலர்களில் ஒருவராக உள்ளார்.ஆசிரியை கொடூரமாக அடித்து கொலை; உடலை எரித்த ஆசிரியர் கைது
பெரம்பலுார் மாவட்டம், வி.களத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் வெங்கடேசன், 44, தீபா, 42, ஆகிய இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்தாண்டு நவ., 15ம் தேதி, இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். பெரம்பலுார், வி.களத்துார் போலீசார் இருவரையும் தேடினர்.இந்நிலையில், கடந்தாண்டு நவ., 30ம் தேதி, கோயம்புத்துார் உக்கடம் அருகே, தீபாவின் 'ரெனால்ட் க்விட்' காரை, வி.களத்துார் போலீசார் கண்டறிந்து சோதனையிட்டதில், காரில் ரத்தக்கறையுடன் சுத்தியல், கத்தி, தீபாவின் கொலுசு, ஏ.டி.எம்., கார்டு, வெங்கடேசனின் இரண்டு மொபைல் போன்களை கண்டெடுத்தனர்.வெங்கடேசனின் மொபைல் போனுக்கு கடைசியாக தொடர்பு கொண்ட, கோவை மதுக்கரையைச் சேர்ந்த பாலியல் புரோக்கர் மோகன் என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்து வரும் தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் சென்னையில் பதுங்கியிருந்த வெங்கடேசனை கைது செய்து, நேற்று பெரம்பலுார் அழைத்து வந்தனர்.அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கூறியதாவது: தீபாவிடம் வெங்கடேசன் கடனாக நிறைய பணம் பெற்றிருந்தார். பணத்தை தீபா திருப்பிக் கேட்டு பல முறை வெங்கடேசனை வற்புறுத்தி வந்தார். மேலும், வெங்கடேசனுக்கு மேலும் சில பெண்களுடன் இருந்த தொடர்பை கைவிடுமாறு, தீபா வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால், அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த ஆசிரியர் வெங்கடேசன், நவ., 15ம் தேதி, தஞ்சாவூர் மாவட்டம், முருக்கன்குடி வனப்பகுதிக்கு தீபாவை அவரது காரில் அழைத்துச் சென்றார்.காரில் வைத்து அவரை அடித்து கொலை செய்து, புதுக்கோட்டை வனப்பகுதியில் எரித்து விட்டார். அந்த காருடன் கோவை திரும்பிய போது, அங்கு விட்டு சென்றார். இவ்வாறு போலீசில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.வாலிபரை பிளேடால் கிழித்து வழிப்பறி செய்த பெண்
சென்னை, பெரியமேடு, குரு தெருவைச் சேர்ந்தவர் மாசூன், 35; எழும்பூர் ரயில் நிலையத்தில் உணவு விற்பனையாளர். இவருடன், மோனோசிங் என்பவரும் வேலை பார்க்கிறார். நேற்று அதிகாலை மாசூன், மோனோ சிங் ஆகியோர் வேலை முடிந்து, அவர்களின் இருப்பிடம் செல்ல, எழும்பூர் வடக்கு பக்க ரயில் நிலையம் அருகே நடந்து சென்றனர்.அப்போது அங்கு வந்த, அடையாளம் தெரியாத பெண் உட்பட நான்கு பேர், மாசூனை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த பெண், மாசூனின் தலை, கைகளில் பிளேடால் கிழித்தார். இதில் அவருக்கு ரத்தம் கொட்டியது. பின், அந்த கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாசூன் அளித்த புகாரின்படி, தப்பிச் சென்ற பெண் உட்பட நான்கு பேரை, எழும்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.சொத்து தகராறில் டிரைவர் தலை துண்டித்துக் கொலை
மதுரை மாவட்டம் மேலுார் அருகே கோட்டநத்தம்பட்டியைச் சேர்ந்த பாண்டி, 40, பால் பண்ணை வேன் டிரைவர். இவருடைய சகோதரர் வாஞ்சிநாதன், ஆறுஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அவரது மனைவி ரூபதி, 30, நரசிங்கம்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன், 38, என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.பிப்., 5 இரவு பண்ணையில் பால் வாங்க செல்வதாக கூறிச் சென்ற பாண்டி, வீடு திரும்பவில்லை. பழையூர்பட்டிக்கு செல்லும் வழியில் அவரது டூ - வீலரும், மொபைல் போனும் நடுரோட்டில் கிடந்தன. அவற்றை கைப்பற்றிய போலீசார் பாண்டியை தேடினர். இந்நிலையில் ரூபதி, கணவர் கார்த்திகேயன் தலைமறைவாயினர். தேனி மாவட்டம் கம்பத்தில் பதுங்கி இருந்த இருவரையும் போலீசார் பிடித்தனர். அவர்கள், பாண்டியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.டி.எஸ்.பி., ஆர்லியஸ் ரெபோனி தலைமையில், ரூபதி, அவரது கணவர், உறவினர்கள் புகழேந்தி, முத்துராமலிங்கம் உட்பட ஐவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.போலீசார் கூறியதாவது: வாஞ்சிநாதன் இறந்த பின் அவரது மனைவி ரூபதிக்கும், பாண்டிக்கும் பாகப்பிரிவினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அதனால், பாண்டியை கொலை செய்ய திட்டமிட்டனர். பிப்., 5ல் கோட்டநத்தாம்பட்டிக்கு கார்த்திகேயன், ரூபதி, அவரது உறவினர்கள் சிலர் இரவு நேரம் காரில் சென்று பாண்டியை எதிர்பார்த்து காத்திருந்தனர்.டூ - வீலரில் பழையூர்பட்டியில் பால் வாங்க சென்ற பாண்டியிடம், பழுதான காரை தள்ளிவிடுமாறு உதவி கேட்டனர். அவர் காரை தள்ளும் போது, பதுங்கி இருந்த சிலர், பாண்டியின் வாயில் துணியை திணித்து, காரில் கடத்தி, நரசிங்கம்பட்டி மலைப் பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு, தலை, காலை துண்டித்துக் கொலை செய்தனர். உடலை சாக்குப்பையில் போட்டு, அதில் கல்லை கட்டி, அங்குள்ள சோழியன் கண்மாயில் போட்டுச் சென்றனர். அழுகிய நிலையில் சாக்கு மூடைக்குள் இருந்த உடல் மீட்கப்பட்டது. இவ்வாறு போலீசார் கூறினர்.போலீஸ் ஏட்டு வீட்டில் நகை, பணம் திருட்டு
சேலம் அருகே அரியானுார், மதுரையான்காடு முதல் வீதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர், 45; மல்லுார் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு. இவரது மனைவி கங்காவதி, 36. தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, ஜெய்சங்கர் வேலைக்கு சென்றார். வீட்டில் இருந்த கங்காவதி, தாயுடன் ஆட்டையாம்பட்டியில் நடந்த கோவில் கும்பாபிஷேகத்துக்கு சென்று விட்டார்.மாலையில் திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தார். பீரோ லாக்கரில் வைத்திருந்த, 12 பவுன் நகை, 3 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. ஆள் இல்லாததை நோட்டமிட்டு, பட்டப்பகலில் களவாணிகள் கைவரிசை காட்டியுள்ளனர். தடயவியல் நிபுணர்கள் கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி, திருடர் களை போலீசார் தேடி வருகின்றனர்.ரூ.82 லட்சம் திருடிய சகோதரர்கள் கைது
புதுக்கோட்டையில், தனியார் எல்.இ.டி., விளக்கு ஒப்பந்த நிறுவன மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் சதீஷ்குமார், 33. இவர், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க, 5ம் தேதி காலை அந்நிறுவனத்தில் பணியாற்றும் உதவியாளர் கார்த்திக், 32, என்பவருடன் காரில், 82 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு புதுக்கோட்டையில் இருந்து புறப்பட்டார்.கட்டியாவயல் அருகே உள்ள அதே நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்கில், காருக்கு டீசல் நிரப்ப நிறுத்தப்பட்ட போது, காரிலிருந்த 82 லட்சம் ரூபாய் பணப்பைகளை திருடிக் கொண்டு கார் டிரைவர் பூங்குடியைச் சேர்ந்த ராமன், 25, தப்பியோடினார்.திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், கார் டிரைவர் ராமன் திட்டமிட்டு பணத்தை திருடிச் சென்றதும், இவருக்கு சிலர் உதவியதும் தெரியவந்தது. போலீசாரின் தீவிர தேடுதலில், பூங்குடியை சேர்ந்த செல்வமணி, 19, புத்தாம்பூரை சேர்ந்த சண்முகம், 25, ஆகியோர் மறுநாள் கைது செய்யப்பட்டனர்.புத்தாம்பூரில் காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட, 75 லட்சம் ரூபாயை போலீசார் மீட்டனர். தலைமறைவாக இருந்த டிரைவர் ராமன், அவரது தம்பி லட்சுமணன், 25, ஆகிய இருவரை தனிப்படை போலீசார் தேடினர். நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் ராமனை தஞ்சாவூரில் கைது செய்தனர். லட்சுமணனை புதுக்கோட்டையில் கைது செய்தனர்.மத்திய அமைச்சர் பெயரில் மோசடி; ஓசூர் பெண் உட்பட 6 பேர் கைது
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்தவர் பவித்ரா, 35; பெங்களூரு ரூரல் ஆனேக்கல்லில், 'புளு விங்ஸ்' என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இவர், கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி, சேலம் மற்றும் கர்நாடகாவின் ஆனேக்கல், அத்திப்பள்ளி, சந்தாபூர் பகுதிகளில் வசிப்பவர்களிடம், 'என் அறக்கட்டளைக்கு, ரிசர்வ் வங்கியில் இருந்து 17 கோடி ரூபாய் வந்துள்ளது.'என்னிடம் கடன் வாங்கிக் கொள்ளுங்கள்; முழு தொகையை திருப்பி தர வேண்டாம். வாங்கும் கடனில் பாதி கொடுத்தால் போதும்; மீதி மானியம்' என்று கூறியுள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெழுத்துடன் கூடிய, சில போலி ஆவணங்களையும் காண்பித்துள்ளார். 'கடன் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, முன்பணமாக 25,000 முதல் 30,000 ரூபாய் வரை கட்ட வேண்டும்' என்றும் கூறியுள்ளார்.அவர் கூறியதை நம்பி கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர், முன்பணம் கட்டினர். ஆனால், கடன் கொடுக்காமலும், முன்பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றி வந்து உள்ளார். ஏமாந்தவர்கள், 'போலீசில் புகார் அளிப்போம்' என்று கூறினாலும், 'கொலை செய்பவனுக்கே ஜாமின் கிடைத்து விடுகிறது; எனக்கு கிடைக்காதா' என்று திமிராக பேசியதுடன், 'உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள்' என்று மிரட்டும் தொனியில் பேசி உள்ளார்.பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அளித்த புகாரில், பவித்ரா, அவரது கூட்டாளிகள் என 13 பேர் மீது, கர்நாடகாவில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளன. இவர்களில் பவித்ரா உள்ளிட்ட ஆறு பேரை, அத்திப்பள்ளி போலீசார் கைது செய்துள்ளனர்; மற்றவர்களை தேடி வருகின்றனர்.