ரேஷன் அரிசி முறைகேடு 2 அதிகாரிகள் ‘சஸ்பெண்ட்’
சென்னை: திருச்சியில், ரேஷன் அரிசி முறைகேடு விவகாரத்தில், நுகர்பொருள் வணிப கழக அதிகாரிகள் இருவர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளனர். தமிழக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், தனக்கு சொந்தமான மற்றும் தனியார் அரவை ஆலைகளில் அரிசியாக மாற்றுகிறது. இந்த அரிசி, ரேஷன் கடைகள் வாயிலாக, கார்டுதாரர்களுக்கு இலவசமாக வினியோகம் செய்யப்படுகிறது. திருச்சியில் ரேஷன் அரிசி அரவை செய்வதற்காக கொடுக்கப்பட்ட, 3,710 டன் நெல்லை முறைகேடு செய்த, அரிசி ஆலை உரிமையாளர் சண்முகம் மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோரை, போலீசார் சில தினங்களுக்கு முன் கைது செய்தனர். இந்த முறைகேடால், அரசுக்கு, 22.20 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, நுகர்பொருள் வாணிப கழக, திருச்சி மண்டல மேலாளர் குமரவேல், தர கட்டுப்பாட்டு பிரிவு மேலாளர் அன்புராஜ் ஆகியோர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளனர் என, துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.