| ADDED : மார் 14, 2024 11:51 PM
மதுரை : ஆக்கிரமிப்பிலிருந்து அரசுக்கு சொந்தமான 14 ஆயிரத்து 500 எக்டோர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தரப்பு தெரிவித்தது.திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே தாயனுார் பனையாடி தாக்கல் செய்த பொதுநல மனு:தாயனுாரில் நத்தம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவற்றை அகற்றி பாதை அமைத்துத்தரக்கோரி கலெக்டர், ஸ்ரீரங்கம் தாசில்தாருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் அமர்வு: அரசு நிலத்தை ஆக்கிரமிப்புகளிலிருந்து பாதுகாக்க தாலுகா, மாவட்டம், மாநில அளவில் குழுக்களை அமைத்து தமிழக வருவாய்த்துறை 2022 ல் அரசாணை பிறப்பித்தது. அக்குழு மாதம் ஒருமுறை கூட வேண்டும்.அரசாணை பிறப்பிக்கப்பட்டாலும் அரசு நிலத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக்கோரி இந்நீதிமன்றத்தில் தினமும் பல வழக்குகள் தாக்கலாகின்றன. அரசாணையை நிறைவேற்ற மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தமிழக வருவாய் நிர்வாக கமிஷனர் மார்ச் 14 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் அவர் ஆஜராக வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.தமிழக அரசு தரப்பு: நத்தம் என வகைப்படுத்தப்பட்ட பட்டா நிலத்தில் பாதை அமைப்பது சாத்தியமில்லை. சமாதான கூட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை. அங்கு ஆக்கிரமிப்பு எதுவும் இல்லை.அரசு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் அவ்வப்போது கூடி ஆலோசித்து நடவடிக்கை எடுக்கின்றன. அரசு புறம்போக்கு நிலம், நீர்நிலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமானவற்றில் 40 ஆயிரம் எக்டேரில் ஆக்கிரமிப்புகள் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. 14 ஆயிரத்து 500 எக்டேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மற்ற ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்கிறது. இவ்வாறு தெரிவித்து அறிக்கை தாக்கல் செய்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள்: மனுதாரருக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் சிவில் நீதிமன்றத்தை நாடலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.