உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனல் மின் நிலையத்தில் ரூ.300 கோடியில் சீரமைப்பு பணி

அனல் மின் நிலையத்தில் ரூ.300 கோடியில் சீரமைப்பு பணி

சென்னை: துாத்துக்குடி அனல்மின் நிலையத்தில், தீ விபத்தில் எரிந்து நாசமான, முதலாவது மற்றும் இரண்டாவது அலகுகளை சீரமைக்கும் பணிகளை, 300 கோடி ரூபாயில் மின் வாரியம் துவக்கிஉள்ளது. துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகம் அருகில், மின் வாரியத்திற்கு சொந்தமான அனல்மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 210 மெகா வாட் திறனில், ஐந்து அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை, 1979 - 1991 காலகட்டத்தில் செயல்பாட்டிற்கு வந்தன. ஒரு அனல்மின் நிலையத்தின் ஆயுள்காலம், 25 ஆண்டுகள். அதையும் தாண்டி, துாத்துக்குடி மின் நிலையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது, தென் மாவட்டங்களின் மின் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. துாத்துக்குடி மின் நிலையத்தில், கடந்த மார்ச் 15ல் தீ விபத்து ஏற்பட்டது. இதில், முதலாவது, இரண்டாவது அலகுகளில் இருந்த, மின் உற்பத்தி சாதனங்கள், கேபிள் உள்ளிட்டவை முழுதுமாக எரிந்து நாசமாகின. இதனால், ஏழு மாதங்களாக மின் உற்பத்தி முடங்கியுள்ளது. இந்நிலையில், முதல் மற்றும் இரண்டாம் அலகுகளை முழுதுமாக சீரமைக்கும் பணிகளை, 300 கோடி ரூபாயில், 'ராதா இன்ஜினியரிங்' என்ற தனியார் ஒப்பந்த நிறுவனம் வாயிலாக, மின் வாரியம் துவக்கி உள்ளது. இந்நிறுவனம், ஓராண்டிற்குள் இரு அலகுகளையும் சீரமைத்து, மின் உற்பத்தியை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !