வாய்ப்பை தவறவிட்ட மாணவி: இட ஒதுக்கீடில் இன்ஜி., படிப்பு சேர்க்கைக்கு உதவ கோரிக்கை
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பள்ளியளவில் முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவி, 7.5 சதவீதம் அரசு ஒதுக்கீடு இன்ஜி., சேர்க்கை வாய்ப்பை தவறவிட்டு தவித்து வருகிறார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த அத்தியூர் திருக்கையை சேர்ந்தவர் அய்யனார்; கூலி தொழிலாளி. இவரது மகளான மாணவி வினிதா கூறியதாவது: அத்தியூர் திருக்கை அரசு மேல்நிலை பள்ளியில் படித்து, பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று, 600க்கு 521 மதிப்பெண் எடுத்தேன். இன்ஜினியரிங் படிக்க விண்ணப்பித்திருந்தேன். ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் படித்ததால், அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடில் படிக்க விரும்பி கவுன்சிலிங்கில் பங்கேற்றேன். முதலில், விழுப்புரம் அருகே ஒரு தனியார் கல்லுாரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க சீட் கிடைத்தது. இதற்காக தனியார் இ - சேவை மையத்திற்கு சென்று, இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கிற்கு ஆன்லைனில் விண்ணப்பித்தேன். அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீதம் இடஒதுக்கீடு பிரிவில் விண்ணப்பிக்க நான் சொன்னதை கவனிக்காமல், தவறுதலாக பொது பிரிவு சேர்க்கை பிரிவில் விண்ணப்பித்து விட்டனர். இதனால், எனக்கு சேலம் பாரதியார் மகளிர் கல்லுாரியில் இடம் கிடைத்தது. ஆனால், என் பெற்றோர் சென்னையில் கூலி வேலை செய்வதால், சேலத்தில் தங்கி படிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இருப்பினும், 30,000 ரூபாய் கடன் வாங்கி பெற்றோர், என்னை கல்லுாரியில் சேர்த்தனர். தொடர்ந்து கடன் வாங்கி படிக்க வைக்க முடியாது என்பதால், பெற்றோர் என்னை படிக்க வேண்டாம் என நிறுத்தி விட்டனர். எனக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீதம் ஒதுக்கீடில், ஏதேனும் ஒரு விடுதியுடன் கூடிய கல்லுாரியில் சேர்க்கை வழங்கினால், என் இன்ஜினியரிங் கனவு நிறைவேறும். இவ்வாறு அவர் கூறினார்.