உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குண்டும் குழியுமாக சாலைகள்; கண்டும் காணாத அதிகாரிகள்

குண்டும் குழியுமாக சாலைகள்; கண்டும் காணாத அதிகாரிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:சட்டசபையில் அமைச்சர் உறுதியளித்தபடி, சாலை பணிகளில் நகராட்சி நிர்வாகத்துறை ஆர்வம் காட்டாததால், நகராட்சி, மாநகராட்சி பகுதி சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன.மாநில நெடுஞ்சாலை துறை பராமரிப்பில், 60,000 கி.மீ., சாலைகள் உள்ளன. இவற்றில், மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில், மழைநீர் கால்வாய், பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் புதைக்கும் பணிகள், நான்கு ஆண்டுகளாக படிப்படியாக நடந்து வருகின்றன.இதுபோன்று கால்வாய், குழாய்கள் அமைத்த பின், அவற்றை நகராட்சி நிர்வாக துறையினர் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். இதனால், புதிய சாலைகள் சின்னாபின்னமாகி விடும். அந்த சாலைகளை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறைக்கு, அரசு உடனடியாக நிதி வழங்காது. காலமுறை புதுப்பிப்பு நேரம் வரும் போது, மீண்டும் சாலை பணிக்கு நிதி ஒதுக்கப்படும்.

கேள்வி

இதனால், ஆண்டு அல்லது மாதக்கணக்கில், பல சாலைகள் மோசமான நிலையிலேயே இருக்கும். அவற்றில் வாகனங்கள் தவழ்ந்தும், ஊர்ந்தும் செல்ல வேண்டியிருக்கும். இந்த நடவடிக்கைக்கு, நெடுஞ்சாலை துறையினரின் தொடர் முயற்சிக்கு பின் முடிவு கட்டப்பட்டு உள்ளது.மழைநீர் கால்வாய், குழாய்கள் புதைக்கும் பணிகளை முடித்த பின், நகராட்சி நிர்வாக துறை வாயிலாகவே சாலை அமைக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதற்காக, மழைநீர் கால்வாய், குடிநீர், பாதாள சாக்கடை குழாய் பதிப்பு பணிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கும் போதே, சாலை புனரமைப்புக்கும் சேர்த்து நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.இவ்வாறு ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக பயன்படுத்தி சாலை அமைப்பதில், நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரி கள் ஆர்வம் காட்டுவதுஇல்லை. பல்வேறு மாநகராட்சி, நகராட்சிகளில் சாலைகள் மோசமாக இருப்பதற்கு இதுவே காரணம். இதுகுறித்து, சட்டசபை கூட்டத்தில் பல எம்.எல்.ஏ.,க்கள் கேள்வி எழுப்பினர்.

உறுதி

அதற்கு பதிலளித்த, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, 'சாலை பணிக்கு தேவையான நிதி உள்ளது. நிதி ஒதுக்குவதில் எந்த பிரச்னையும் இல்லை. கால்வாய் கட்டுமானம், குழாய் புதைப்பு பணிகள் முடிந்த பின், சாலைகளை சீரமைத்து விடலாம்' என்று உறுதிஅளித்தார். ஆனாலும், பல மாதங்களாக சாலைகள் சீரமைக்கப்படாமல், அப்படியே உள்ளன. இதனால், நெடுஞ்சாலை துறையிடம் மக்கள் புகார் செய்வதால், வீண் பழி சுமப்பதாக, நெடுஞ்சாலை துறையினர் புலம்புகின்றனர்.

ஏராளமான புகார்கள்

நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மழைநீர் கால்வாய், பாதாள சாக்கடை, குடிநீர் குழாய்கள் அமைத்த பின், சாலைகளை முழுமையாக சீரமைக்க நகராட்சி நிர்வாகத் துறையினருக்கு நிதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், பள்ளம் தோண்டிய இடத்தில் மட்டும், 'கான்கிரீட்' போட்டு கணக்கு காண்பிக்கின்றனர். அந்த பணியையும் முறையாக செய்யாமல், அரைகுறையாக வைத்துள்ளனர்.ஒரு சாலை அமைத்ததும், மூன்று ஆண்டுகளுக்கு பின்னரே அதை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறைக்கு நிதி வழங்கப்பட வேண்டும் என்பது விதி. அதனால், சேதமடைந்த சாலைகளை சீரமைக்க முடியாத நிலை உள்ளது. இது தெரியாமல், ஏராளமான புகார்கள் நெடுஞ்சாலைத் துறைக்கு வருகின்றன. 'நம்ம சாலை' செயலி வாயிலாகவும் புகார்களை குவித்து வருகின்றனர். இப்பிரச்னையை, முதல்வரின் கவனத்திற்கு சென்றால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி