உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாஜி அமைச்சரின் பினாமி வீட்டில் பல கோடி ரூபாய் கொள்ளை; கணக்கில் காண்பித்ததோ ரூ.44 லட்சம்; டிரைவர் உட்பட 4 பேர் கைது!

மாஜி அமைச்சரின் பினாமி வீட்டில் பல கோடி ரூபாய் கொள்ளை; கணக்கில் காண்பித்ததோ ரூ.44 லட்சம்; டிரைவர் உட்பட 4 பேர் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரின் பினாமி வீட்டில் ரூ.பல கோடி கொள்ளை போன வழக்கில் கார் டிரைவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் ரூ.44 லட்சம் திருடு போனதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தல் செலவுக்காக அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஒருவர் தனது பினாமியிடம் ரூ.பல கோடி கொடுத்து வைத்திருந்தார். இந்நிலையில் ஜூன் 21ல் மதுரை விளாங்குடி அபார்ட்மென்ட் வீடு ஒன்றில் ரூ.17 கோடி கொள்ளை போனது. இது முன்னாள் அமைச்சரின் பினாமி வீடு என தகவல் பரவியது.முன்னாள் அமைச்சர், ஆளுங்கட்சியின் உச்ச அதிகாரம் படைத்தவரிடம் தகவல் தெரிவிக்க, கொள்ளை போன வீட்டின் உரிமையாளர் ஜெயந்திரன் 45, என்பவரிடம் புகார் பெற்று போலீசார் ரகசியமாக விசாரணையை துவக்கினர்.

எப்.ஐ.ஆரில் இருப்பது என்ன

இது தொடர்பாக கே.கே.நகர் பிரகாஷ் 35, நாகமலை புதுக்கோட்டை விவேகானந்த் 34, திருப்பாலை யோகேஷ் 36, பொதும்பு சுரேஷ் 49, ஆகியோரை கூடல்புதுார் போலீசார் கைது செய்து கொள்ளை போன பணத்தின் பெரும்பகுதியை மீட்டனர். ஆனால் முதல் தகவல் அறிக்கையில் ரூ.44 லட்சம் கொள்ளை போனதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.அதில் தெரிவித்துள்ளது: நான் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளேன். எனது 16 வயது மகனின் சிகிச்சைக்காகவும், பணி நிமித்தமாகவும் மதுரையில் வசித்து வருகிறேன். எனது சொந்த ஊரான தேனி மாவட்டம் போடி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவிற்காக குடும்பத்துடன் ஜூன் 17ல் சென்றுவிட்டு ஜூன் 21ல் திரும்பினேன். வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பேக்கில் எனது சொத்துக்களை விற்ற வகையில் கிடைத்த ரூ.44 லட்சத்தை காணவில்லை. வீட்டில் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஜூன் 23ல் புகார் கொடுக்க நேரில் வந்தேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாஜியின் கார் டிரைவர்

போலீசார் கூறியதாவது: இவ்வழக்கில் கைதான சுரேஷ், முன்னாள் அமைச்சரின் கார் டிரைவர். இவரது நண்பர் யோகேஷிடம் அடிக்கடி அபார்ட்மென்ட்டிற்கு பணம் விஷயமாக மாஜி சென்று வருவதை தெரிவித்துள்ளார். அது கணக்கில் வராத பணம் என்பதால் கொள்ளையடித்தால் வெளியே தெரியாது என முடிவு செய்து திட்டம் வகுத்தனர். இவர்களுடன் நண்பர்கள் பிரகாஷ், விவேகானந்த் சேர்ந்து கொண்டனர். நேரம் பார்த்து கொள்ளை அடிக்க வேண்டும் என்பதற்காக, அந்த அபார்ட்மென்ட்டிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கி நோட்டமிட்டனர். மாஜியின் பினாமி குடும்பத்துடன் வெளியூர் சென்ற நிலையில் பணத்தை கொள்ளையடித்தனர்.எங்களின் தொடர் தேடுதலில் 4 பேரும் அடுத்தடுத்து சிக்கினர். அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் பதுக்கி வைத்திருந்த ரூ.பல கோடியை மீட்டோம். இவ்வாறு கூறினர். பணம் மீட்கப்பட்ட பிறகே முன்னாள் அமைச்சர் பொது நிகழ்ச்சியில் உற்சாகமாக பங்கேற்று வருகிறார். பணம் கொள்ளை போனது குறித்து நிருபர்கள் கேட்டால் 'என்னை ஓட்டாதீங்கப்பா' என ஜாலியாக கிண்டல் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

venugopal s
ஜூலை 03, 2025 15:51

அதிமுக பாஜக கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்தது ஏன் என்று இப்போது புரிந்து விட்டது!


A.Gomathinayagam
ஜூலை 03, 2025 14:29

முறைதவறி, அரசியல் கட்சியின் பின்னணியோடு வருமானம் ஈட்டுபவர்களிடம் தான் இன்று கோடிகள் குவிகின்றன. நேர்மையாக வாழ நினைப்பவர்களுக்கு சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் கிடையாது. அவர்கள் வாழ்வு, கடனில் பிறந்து கடனில் வாழ்ந்து கடனாளியாகவே இறக்கிறார்கள்


seshadri
ஜூலை 03, 2025 13:52

இவர் மாஜி அமைச்சர் பணத்திற்கு பஞ்சம் இருக்காது. பினாமி சின்ன வீடு பெரிய வீடு என்று பல பெயர்களில் கொள்ளை அடித்த பணம் இருக்கும். அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை என யார் வந்தாலும் கவலை இல்லை. சுப்ரீம் கோர்ட் வரை செல்ல பணம் இருக்கிறது. எனவே ஜாமின் வாங்கி சந்தோஷமாக காலம் கழிப்பார் உச்ச கோர்ட்டில் இருக்காக வாதாட சில பணக்கார வக்கீல்கள் இருப்பர் அவர்களிடம் ஒரு பகுதி லஞ்சம் வாங்கி கொண்டு அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு சொல்ல நீதி அரசர்களும் உண்டு. எனவே இவருக்கு பயமில்லை.


அஜய்
ஜூலை 03, 2025 13:37

10 பவன் நகைக்கு police அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் அடித்து கொலை செய்கிறார்கள். இங்கு 44 கோடி பணம் ஊழல் செய்து ஒழித்து வைத்து உள்ள அரசியல்வாதி சுதந்திரமாக வெளியே திரிகிறார். இங்கு police, நீதி மன்றம், பத்திரிகை துறை தூங்குகிறது நிரந்திரமாக


RAAJ68
ஜூலை 03, 2025 13:55

44 லட்சம்


கல்யாணராமன் சு.
ஜூலை 03, 2025 13:30

கைது செய்யப்பட்ட 4 பேருமே, கொஞ்ச நாள் தலைமறைவா இருந்துட்டு, முதல் தகவல் அறிக்கை வந்தபிறகு, அதில் எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு, அந்தப் பணத்தோட நீதிமன்றத்திலே சரணடைச்சிருக்கணும்... 44 லட்சத்தை திருப்பி கொடுத்துட்டு, மீதி 16.55 கோடிப் பணத்தோட தண்டனை காலம் முடிஞ்சவொடனே குடும்பத்தோட வெளிநாட்டுக்குப் போய் சந்தோஷமா வாழ்ந்திருக்கலாம் ....ரொம்ப ஆங்கில சினிமா பார்ப்பதின் விளைவு


RAJA72
ஜூலை 03, 2025 12:39

சொத்துக்களை விற்று 44 லட்சம் வைத்திருந்ததாக சொல்கிறார் புகார்தாரர். சொத்துக்களை விற்று ஏன் பணமாக வைத்திருக்க வேண்டும். 49 ஆயிரத்தை தாண்டினால் வங்கி மூலம் தான் பணப்பரிமாற்றம் செய்ய வேண்டும். சொத்துக்களை யார் யாருக்கு விற்றார் என்னென்ன சொத்துக்கள் விற்கப்பட்டன அவற்றின் ஆவணங்கள் என்ன வாங்கியவர்கள் ஏன் பணமாக கொடுத்தனர் எந்த பதிவு துறை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது போன்ற விவரங்களை வருமான வரித்துறை கேட்காதா. கேட்காது ஏனென்றால் பாஜகவுடன் அண்ணா திமுக கூட்டணி வைத்துள்ளது எனவே பாஜக வருமான வரித்துறை இவர்களை எதுவும் செய்யாது. முன்னாலய மந்திரி தற்போது உள்ள ஆளும் கட்சி மந்திரிகளுடன் நெருக்கமாக இருப்பதால் எல்லாம் சாதகமாக உள்ளன. இதில் ஆளும் கட்சியினருக்கு எவ்வளவு கோடிகள் பங்கு போயிற்றோ . கொள்ளை போனது 17 கோடிகளா 60 கோடிகளா 600 கோடிகளா ஆண்டவனுக்கே வெளிச்சம். தினக்கூலி வேலை செய்பவர்கள் 500 ரூபாய் 600 ரூபாய் சம்பளம் பெறுவதற்கு வெயிலில் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் அரசியல்வாதிகளுக்கு லட்சங்களும் கோடிகளும் காப்பி சாப்பிடுவது போல் உள்ளது. 3000 ரூபாய் லஞ்சம் பெற்றவரை மறைந்து இருந்து பிடித்ததாக உலக மகா சாதனையாக மார் தட்டி கொள்கிறார்கள். ஆனால் கோடிகளை கொள்ளையடிப்பவர்கள் சுதந்திரமாக ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ளனர்.


RAAJA
ஜூலை 03, 2025 12:03

மாஜி அமைச்சர் என்று பெயர் சொல்லாமல் செய்தி போட்டுவிட்டு அந்த செய்தியின் கீழ் வேறு ஒரு செய்தியில் அந்த மாதிரி அமைச்சரின் புகைப்படத்தை போட்டு வெளிச்சம் போட்டு காட்டியதற்கு நன்றி


Rengaraj
ஜூலை 03, 2025 11:16

ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர்கள் கேட்டுக்கொண்டாள் இந்த காவல் துறை எவ்வளவு வேகமாக செயல்படுகிறது பாருங்கள்


ஆரூர் ரங்
ஜூலை 03, 2025 09:21

நடுவில் தொப்பிகளுக்கு பாதி?


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 03, 2025 16:10

அமித்திமுக ஆட்களுக்கு எதிரா ஒரு ஃபைல் தயாராக இருப்பதாக எனாமலை சொன்னாரே .... இவருக்கு எதிரானதா இருக்குமோ ???


RAAJA
ஜூலை 03, 2025 09:21

உள்ளூர் ராஜு தான் அவரு வேற யாரு. கருப்பு பணத்தை எப்படி பதுக்குவது எங்கே வைப்பது என்பது இவர்களுக்கு சாமர்த்தியம் போதாது திமுக மந்திரிகளிடமிருந்து வகுப்பு எடுத்துக்க வேண்டும். பல்லாயிரம் கோடிகளை சுருட்டி ஆளும் கட்சியினர் எங்கே வைத்துள்ளனர் எப்படி வைத்துள்ளனர் என்பது யாருக்கும் தெரியாது.


முக்கிய வீடியோ