ஆட்சி அதிகாரத்தில் பங்கு த.வெ.க., கருத்திற்கு வரவேற்பு: விஜய பிரபாகரன் பேட்டி
அவனியாபுரம்: ''ஆட்சி அதிகாரத்தில் பங்கு என த.வெ.க., தலைவர் விஜய் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது,'' என, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: நடிகர் விஜய் கட்சி துவங்கி, கொள்கைகள் குறித்து பேசி உள்ளார். அது அவரது தனிப்பட்ட கருத்து. நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு இந்த மாநாட்டை அவர் நடத்தியுள்ளார். அவர்கள் கட்சியை பொறுத்தவரை, இந்த மாநாட்டை வெற்றியாக தான் கருதுவர். 'த.வெ.க.,வுடன் தே.மு.தி.க., கூட்டணி சேருமா?' என கேட்கின்றனர். இணைவோமா, இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மதுரையில், 20 ஆண்டு களுக்கு முன் விஜயகாந்த், கட்சி மாநாடு நடத்தினார். அதில், 30 லட்சம் பேர் வரை பங்கேற்றனர். 40,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்தன. அப்படி இருந்தும் ஒரு உயிர் பலி கூட இல்லாமல் அனைவரும் பத்திரமாக வீட்டுக்குச் செல்ல வேண்டும் என ராணுவ கட்டுப்பாடுடன் விஜயகாந்த் மற்றும் தொண்டர்கள், நிர்வாகிகள் மாநாட்டை சிறப்பாக நடத்தினர். 'வரும் 2026 தேர்தலில், 200 தொகுதிகளை கைப்பற்றுவோம்' என, முதல்வர் ஸ்டாலின் கூறி வருவது, அவரது நம்பிக்கை. அவரின் நம்பிக்கையை முறியடிக்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் வேலை. 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என விஜய் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. உழைப்பை மட்டும் மற்ற கட்சிகளிடமிருந்து எடுத்துக் கொண்டு, அதிகாரத்தில் பெரிய கட்சி இருக்கும்போது அதை சரி சமமாக அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அ.தி.மு.க., ஒன்றிணைந்தால் நல்லது தான். ஆனால், அது அவர்களது கட்சி விவகாரம். நாங்கள் ஒன்றும் கூற முடியாது. எங்கள் கூட்டணி பலமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.