உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 24 ஆண்டுகளாக போலீசுக்கு டிமிக்கி ஆந்திராவில் சிக்கினார் ரவுடி சேரா

24 ஆண்டுகளாக போலீசுக்கு டிமிக்கி ஆந்திராவில் சிக்கினார் ரவுடி சேரா

சென்னை: கடந்த, 24 ஆண்டுகளாக, போலீசார் கண்ணில் படாமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த ரவுடி சேரா, ஆந்திராவில் கைதானார்.மியான்மரில் இருந்து, வடசென்னைக்கு, 1960ம் ஆண்டுகளில் வந்தோரில், சிலர் குற்ற செயல்களில் ஈடுபட்டனர். நாளடைவில் பெரும் ரவுடிகளாக உருவெடுத்தனர். அந்த வகையில், 1970ல், வடசென்னையில், சுப்பையா, பெஞ்சமின் என்ற இரு தாதாக்கள், போலீசாருக்கு பெரும் தலைவலியாக இருந்தனர். இவர்களுக்கு கீழ், இரண்டு ரவுடி குழுக்களும் செயல்பட்டு வந்தன. இக்குழுவினர் தொழில் போட்டியில், ஒருவரையொருவர் தீர்த்துக் கொண்டனர். அந்த வகையில், பெஞ்சமினின் வலதுகரமாக செயல்பட்ட, ரவுடி வெள்ளை ரவி, எம்.கே.பி., நகரில் சுப்பையாவின் கதையை முடித்தார். அதற்கு பழி வாங்க, சுப்பையாவின் உறவினரான, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ராஜேந்திரன் என்ற சேரா ரவுடியாக களமிறங்கினார்.வெள்ளை ரவி, சேரா ஆகியோர், ஆள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுதல் போன்ற வேலைகளை செய்து வந்தனர். சேரா மீது, மூன்று கொலை, ஐந்துக்கும் மேற்பட்ட கொலை முயற்சி என, 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. வெள்ளை ரவி, அரசியல் பிரமுகரை கடத்திய வழக்கில், போலீசாரால், 'என்கவுன்டர்' செய்யப்பட்டார்.போலீசாரால் கைது செய்யப்பட்ட சேரா, 2001ல் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த பின் தலைமறைவானார். சில தினங்களுக்கு முன், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., - எம்.கே.பாலன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த, வடசென்னை ரவுடி சோமசுந்தரம், ஆந்திராவில் கைது செய்யப்பட்டார். இவர், சேராவின் வலதுகரம் என்பதால், அவரிடம் சேரா பதுங்கி இருக்கும் இடம் குறித்து விசாரித்தனர். அவர் அளித்த தகவலில், தனிப்படை போலீசார் ஆந்திரா சென்று, தலைமறைவாக இருந்த சேராவை, 60, நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில், சேரா ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் போல செயல்பட்டு, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. சேரா, சில ஆண்டுகள் காவல் துறையில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டவர் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ