ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.1.30 கோடி லபக்
பாலக்காடு: சென்னையில் உள்ள ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி, ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாலக்காடு மாவட்டம், ஒற்றைப்பாலத்தில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அவருக்கு ரிசர்வ் வங்கியில் இருந்து அழைப்பதாக கூறி, போன் வந்தது.அவரது வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதாக தெரிவித்தனர். வங்கியின் விசாரணை அதிகாரி என்று தெரிவித்து, மீண்டும் ஒருவர் போனில் தொடர்பு கொண்டு இவரிடம் இருந்து தகவல்கள் சேகரித்தார்.நீதிபதி என்று தெரிவித்து, வீடியோ அழைப்பு வாயிலாக வந்த நபர், ஏழு நாட்கள் இவரை மெய்நிகர் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதில், பதறிப்போன இவரின் வங்கிக்கணக்குகளில் இருந்து அந்த கும்பல், 1.30 கோடி ரூபாயை அவர்களது வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளது.மத்திய அரசில் உயர் அதிகாரியாக ஓய்வு பெற்று கிடைத்த பணம் மற்றும் இவரது மனைவியின் ஆசிரியர் ஓய்வூதியம் உட்பட, கும்பல் மோசடி செய்துள்ளது. தான் ஏமாந்த விஷயம் அறிந்து, இவர் போலீசில் புகார் அளித்தார். சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மூன்று மாதத்தில் 11 பேர் இப்படி மோசடிக்கு ஆளாகி, 5 கோடி ரூபாய் இழந்துள்ளனர். இதில், 1 கோடி ரூபாய் போலீஸ் தலையீடால் திரும்ப கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.