உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர் சங்கம் பெயரில் ரூ.40 லட்சம் மோசடி

நடிகர் சங்கம் பெயரில் ரூ.40 லட்சம் மோசடி

சென்னை:தென்னிந்திய நடிகர் சங்கம் பெயரை பயன்படுத்தி, 40 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட அச்சங்கத்தின் முன்னாள் மேலாளர் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில், நடிகர் சங்க மேலாளர் தர்மராஜ் அளித்துள்ள புகார் மனு:நடிகர் சங்கத்தின் முன்னாள் மேலாளர் பாலமுருகன் துாண்டுதலில், சங்க உறுப்பினர் சங்கர்பாபு மற்றும் முன்னாள் உறுப்பினர் சதீஷ்குமார் இணைந்து, 'எவர்கிரீன் மீடியா' என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை உருவாக்கி உள்ளனர்.இது, நடிகர் சங்கத்தின் ஒரு துணை அமைப்பு என, பொதுவெளியில் சட்டவிரோதமாக விளம்பரம் செய்து வருகின்றனர். நடிகர் சங்க பெயரை பயன்படுத்தி, அனைத்து உள்ளூர், தனியார், 'டிவி' நிறுவனங்களிடம் இருந்து விளம்பரங்கள் ஒளிபரப்புவதற்கான உரிமைகள் பெற்று, அதன் வாயிலாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக, எங்களுக்கு வந்த புகார்கள் அடிப்படையில் விசாரணை செய்தோம். அப்போது, சட்ட விரோதமான இந்த நடவடிக்கை வாயிலாக, 40 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.எனவே, நடிகர் சங்கத்தின் பெயரையும், எங்களின் அலுவலக முகவரியையும், சங்க நிர்வாகிகளின் பெயரையும் தவறாக பயன்படுத்தி, சங்கத்தை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ள பாலமுருகன், சங்கர்பாபு, சதீஷ்குமார் ஆகியோர் மீது, வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த புகார் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நடிகர் சங்க அலுவலக முகவரியையும், சங்க நிர்வாகிகளின் பெயரையும் முறைகேடாக பயன்படுத்தி இருப்பதால், நடிகர், நடிகையர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, சங்க செயற்குழுவை கூட்ட முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி