நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க ரூ.518 கோடி கேட்பு
சென்னை:'நில உரிமை ஆவணங்களை, டிஜிட்டல் முறைக்கு மாற்றும் பணிக்கு, 518 கோடி ரூபாயை ஊக்கத்தொகையாக அளிக்க வேண்டும்' என, மத்திய அரசிடம், தமிழக அரசு கேட்டுள்ளது.தமிழகத்தில் நிலம் தொடர்பான ஆவணங்களை, டிஜிட்டல் முறைக்கு மாற்றும் பணிகள், 2000ம் ஆண்டில் துவங்கின. இதன்படி, புதிதாக உருவாக்கப்படும் பட்டா, நில வரைபடம், அடங்கல், 'அ பதிவேடு' போன்ற ஆவணங்கள், டிஜிட்டல் முறையில் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆவணங்களை, 'ஆன்லைன்' முறையில், பொதுமக்கள், பிற அரசு துறைகள் எளிதாக பயன்படுத்தலாம். டிஜிட்டல் மயமாக்கப்பணி விரைவாக நடப்பதால், தமிழக அரசு, 518 கோடி ரூபாய் ஊக்கத்தொகை கேட்டுஉள்ளது.இதுகுறித்து வருவாய் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை கருத்தில் வைத்து, கூடுதல் ஊக்கத்தொகை கேட்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 518.41 கோடி ரூபாய் கூடுதல் ஊக்கத்தொகை கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.