ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை: சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் முன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். சங்கத் தலைவர் காந்திமதிநாதன் பேசியதாவது: ஊரக வளர்ச்சித் துறையில், 1,500க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலர் பணியிடங்கள், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ளன. அதேபோல், ஓட்டுனர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலர்களை, தமிழக உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். ஏழு ஆண்டுகள் பணி முடித்துள்ள மேற்பார்வையாளர்கள் அனைவருக்கும், இளநிலை பொறியாளர் நிலைக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும். இதுபோன்ற, 21 கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.