உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிளாஸ்டிக் பாட்டிலில் பால் விற்பனை: ஆவின் ஆய்வு நடத்த தீர்ப்பாயம் உத்தரவு

பிளாஸ்டிக் பாட்டிலில் பால் விற்பனை: ஆவின் ஆய்வு நடத்த தீர்ப்பாயம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பாட்டிலில், பால் விற்பனை செய்வது குறித்து ஆய்வு நடத்த வேண்டும்' என, ஆவின் நிறுவனத்திற்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், பால், தயிர், வெண்ணெய், நெய் போன்ற பால் பொருட்கள், பிளாஸ்டிக் பைகள், டப்பாக்களில் அடைத்து விற்கப்படுகின்றன. மட்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பைகளை சேகரித்து மறுசுழற்சி செய்ய, ஆவின் நிறுவனம் எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. பிளாஸ்டிக் பைகளை துாக்கி எறிவதால், சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு, மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.எனவே, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, கண்ணாடி பாட்டில்கள் அல்லது, 'டெட்ரா பாக்கெட்'டுகளில், பால் விற்க உத்தரவிட வேண்டும்' என, சென்னையைச் சேர்ந்த அய்யா, சுரேந்திரநாத் கார்த்திக் ஆகியோர், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர்.இதை விசாரித்த தீர்ப்பாயம், 'மீண்டும் பயன்படுத்தக் கூடிய அல்லது மறுசுழற்சி செய்யக் கூடிய பிளாஸ்டிக் பாட்டில் அல்லது கண்ணாடி பாட்டிலில், ஆவின் பால் விற்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆவின் நிறுவனம் ஆராய வேண்டும்' என்று உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு, தீர்ப்பாயத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆவின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை செய்தால், அதற்கான செலவு அதிகரிக்கும். பல நுாறு கோடி ரூபாய் செலவில், அதற்கான இயந்திரங்கள் வாங்க வேண்டியிருக்கும்' என்றார்.அப்போது குறுக்கிட்ட, தமிழக அரசு வழக்கறிஞர், 'ஆவின் நிறுவனம், மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலையில், பால் விற்பனை செய்கிறது. பாட்டிலில் பால் விற்றால், விலை அதிகமாகி மக்கள் பாதிக்கப்படுவர். தனியார் நிறுவனங்களும் பிளாஸ்டிக் பைகளில் தான், பால் விற்பனை செய்கின்றன' என்றார்.அதைத்தொடர்ந்து, தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், 'மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பாட்டிலில், பால் விற்பனை செய்வது குறித்து, ஆவின் நிறுவனம் முதல்நிலை ஆய்வு நடத்த வேண்டும். தனியார் நிறுவனங்களுக்கு முன் மாதிரியாக ஆவின் இதை செய்யலாம்' என்று உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை, ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Radha Krishna K
பிப் 03, 2025 11:00

கருத்து கூற இன்னும் காலம் கனிய வில்லை


Suppan
டிச 17, 2024 16:16

நெகிழி மக்களுக்குக்கிடைத்த வரப்பிரசாதம். அதனை மறு சுழற்சி செய்வதுதான் விவேகமான செயல். முன்பு கண்ணாடி பாட்டில்களை உபயோகப்படுத்திய பொழுது மக்கள் அதனை திருப்பிக்கொடுக்கும் முன் மண்ணெண்ணெய் வாங்குவது முதற்கொண்டு பல விதமாக உபயோகப்படுத்தி பின் கொடுத்தார்கள். அதனை சுத்தமாகக் கழுவுவது செலவு பிடிக்கும் வேலை. பெங்களூரு போன்ற நகரங்களில் பிளாஸ்டிக் பொருட்களை தனியாக சேமித்து மறு சுழற்சி செய்ய அனுப்புகிறார்கள். அரசு சாரா சேவை மையங்கள் இதனை முன்னெடுக்க வேண்டும் .


அப்பாவி
டிச 17, 2024 10:37

உ.பி ல சீனாவிலிருந்து ஒரு வேதிப்பொருளை இறக்குமதி செய்து அதில் தண்ணியைக் கலந்தா சுத்த பசும்பால் ஆயிடுதாம். ரொம்ப வருஷம ஒரு உ.பி அங்கே அப்பிடி செயற்கைப் பால் தயாரிச்சு கொள்ளை லாபமாம். இன்றைய தினமலர் பத்திரிகை செய்தி இது. உ.பி க்காரன் எவ்ளவோ முன்னேறிட்டான். இங்கே நாம பாட்டில் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்கோம்.


p karuppaiah
டிச 17, 2024 10:11

பிளாஸ்டிக் ஒழிப்பதில் என்ன, அரசு, தனியார் என்ற பாகுபாடு, விதிமுறை என்பது எல்லாருக்கும் பொருந்தும். பிளாஸ்டிக் உற்பத்தியை தடுக்க வேண்டுமே தவிர, உபயோகப்படுத்துவர்கள் அல்ல .


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
டிச 17, 2024 09:32

இன்னைக்கு செலவு அதிகரிக்குமாம். ஆனால் வருங்கால தலைமுறை கஷ்டப்பட்டால் பரவாயில்லையாம். பிளாஸ்டிக்கை அறவே ஒழிக்க வேண்டுமென்று வெறுமே கூறும் நீதிமன்றங்கள் அதை நடைமுறைப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பிளாஸ்டிக் வருவதற்கு முன்பு மனிதன் வாழவே இல்லையா? மனிதன் மட்டும் எதோ புத்திசாலி போல மற்ற உயிர்களை வதைத்து வருகிறோம். ஆனால் இதற்கான தண்டனையை இயற்கை கொடுத்தே தீரும்.


சாண்டில்யன்
டிச 17, 2024 07:21

டாஸ்மாக்கில்தான் அந்த பத்து ரூவா ப்ராப்லம்னா இங்கியும் கொண்டுவரலாமா? பிளாஸ்டிக் உபயோகத்தை அறவே ஒழிக்கணும்னு சொல்றது கனம் கோர்ட்டார் அவர்களுக்கு தெரியாதா என்ன. இருந்தும் இந்த உத்தரவா? நோட்டா கொண்டுவந்து என்ன பலன் கண்டார்கள் என்று அறிவுஜீவிகள்தான் விளக்கணும் இவர்களுக்கு தேவை வெறும் வாய்க்கு மெல்ல அவல் மாதிரி சொத்தையான ப்ராப்லம்


முக்கிய வீடியோ