டீசலை முந்தியது சி.என்.ஜி., கார்கள் விற்பனை
சென்னை:வாகன பதிவேடு தரவுகளின் படி, இந்திய வரலாற்றில் முதல் முறையாக, கடந்த நிதியாண்டில், டீசல் கார்களை விட சி.என்.ஜி., கார்களின் விற்பனை அதிகரித்து உள்ளது. கடந்த நிதியாண்டில், 7.37 லட்சம் டீசல் கார்கள் விற்பனையான நிலையில், 7.87 லட்சம் சி.என்.ஜி., கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. அதேநேரம், 25.13 லட்சம் பெட்ரோல் கார்கள், 1.08 லட்சம் மின்சார கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.மாற்று எரிபொருள் கார்கள் வருகை அதிகரிப்பு; அவற்றின் செயல்பாட்டு செலவு குறைவு; பெட்ரோல், டீசல் விலை உயர்வு; பசுமை சூழல் தொடர்பான விழிப்புணர்வு போன்றவை, சி.என்.ஜி., கார்களின் விற்பனையை வேகப்படுத்தி உள்ளன. கடந்த, 2023 -2024ம் நிதியாண்டில், சி.என்.ஜி., கார்களின் சந்தை பங்கு 15 சதவீதமாக இருந்தது. கடந்த நிதியாண்டில், 20 சதவீதமாக அதிகரித்துள்ளது.மாறிவரும் வாகன சந்தை மற்றும் நுகர்வோர் முன்னுரிமைகள், மாற்று எரிபொருள் மற்றும் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கின்றன. குறிப்பாக, சி.என்.ஜி., கார்கள், அதிக மைலேஜ் வழங்குவதால், அதை வாங்க நுகர்வோர் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், அடுத்து வர இருக்கும் சுற்றுச்சூழல் மாசுபாடு விதிமுறைகள், புதுடில்லி உள்ளிட்ட நகரங்களில் 10 ஆண்டு கார் பயன்பாட்டுக்கு தடை போன்றவை, டீசல் கார்களின் விற்பனையை பாதிக்கின்றன.நாட்டில் விற்பனையாகும் சி.என்.ஜி., கார்களில், மாருதி சுசூகி நிறுவனம், 70 சதவீத பங்கை வைத்துள்ளது. இந்நிறுவனம், பிரெசா, எர்டிகா, கிராண்ட் விட்டாரா உள்ளிட்ட 13 சி.என்.ஜி., மாடல் கார்களை விற்பனை செய்து வருகிறது. கடந்த நிதியாண்டில் விற்பனையான மூன்றில் ஒரு சி.என்.ஜி., கார், மாருதி நிறுவனத்தை சேர்ந்ததாகும்.