உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் : கேரளாவுக்கு லாரி, லாரியாக கடத்தல்

தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் : கேரளாவுக்கு லாரி, லாரியாக கடத்தல்

குறிச்சி: கோவை வழியாக கேரளாவுக்கு, மணல் கடத்திச் செல்வது அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 66 இடங்களில் பொதுப்பணித்துறை மூலம் மணல் அள்ள, அரசு அனுமதி வழங்கியுள்ளது. அள்ளப்படும் இடங்களில், இரண்டு யூனிட் 624 ரூபாய்க்கு வழங்கப்படும் மணல், அங்கிருந்து லாரிகளில் கொண்டு வரப்பட்டு கோவை மாவட்டத்தில், மூன்றே கால் யூனிட், 11 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கேரளாவில், நீர்நிலைகளில் மணல் அள்ள, அம்மாநில அரசு தடை விதித்துள்ளதால், மூன்றே கால் யூனிட் மணல், 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் பலர், கோவை மாவட்டம் வழியாக, கேரளாவுக்கு மணலை கடத்தி வருகின்றனர். மதுக்கரை அடுத்துள்ள வேலந்தாவளம் வழியாக, நாள்தோறும், 80 முதல் 100 லாரிகள் வரை மணல் கடத்திச் செல்லப்படுகிறது.ஒரு டாரஸ் லாரி மணலின் விலை, கோவையில் 17 ஆயிரம் ரூபாய். அதே மணல், கேரளாவில் 40 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. லாரி உரிமையாளருக்கு ஆகும் செலவு, டீசலுக்கு 2,000 ரூபாய், தமிழக போலீசாருக்கு 1,500 ரூபாய், ஆர்.டி.ஓ., செக்-போஸ்ட் ஊழியர்களுக்கு 100 ரூபாய், வனத்துறையினருக்கு 100 ரூபாய், கேரள மாநில வரி 1,500 ரூபாய் என, 5,200 ரூபாய் வரை செலவிடுகின்றனர். நாள்தோறும் இரவு 8 மணி முதல், மறுநாள் காலை 6 மணி வரை, இக்கடத்தல் லாரிகள் தமிழக எல்லையை கடந்து செல்கின்றன. இந்நிலை தொடர்ந்தால், தமிழகத்தில் மணலுக்கு மீண்டும் செயற்கை தட்டுப்பாடு ஏற்படும். தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு, மணல் கடத்தலை முற்றிலும் தடுக்க வேண்டும் என, கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளோரும், மக்களும் எதிர்பார்க்கின்றனர்.அதிகாரிகளுக்கு வருகிறது 'ஆப்பு' : கரூர், மாயனூர் காவிரியாற்று பகுதியில், அனுமதியின்றி மணல் அள்ளியதாக, தி.மு.க., எம்.எல்.ஏ., பழனிசாமியை, நேற்று முன்தினம் மதியம், 2.45 மணிக்கு கைது செய்த போலீசார், இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற ஆறு பேரை தேடி வருகின்றனர். இந்நிலையில், தடையை மீறி மணல் எடுத்ததாக, வி.ஏ.ஓ., குறிப்பிட்டுள்ள காலகட்டத்தில் பொறுப்பில் இருந்த பொதுப்பணித்துறை, கனிமவளத்துறை, வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் பற்றிய வினரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அச்சமயங்களில், அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தனர் என்பது பற்றியும் விசாரிக்கப்படுகிறது. மணல் கொள்ளையின் போது, பொறுப்பில் இருந்த பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகளில் சிலர், தற்போதும் கரூரில் பதவியில் உள்ளதால், முழுமையான விவரங்கள் கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ளது. இதனால், மணல் கொள்ளை சம்பந்தமாக விரிவான விசாரணை நடத்த, நியாயமான அதிகாரிகள் கொண்ட புதிய குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி : மாயனூர் காவிரியாற்றில், தடையை மீறி மணல் எடுத்த விவகாரத்தில், மாவட்டத்தை சேர்ந்த முக்கிய அ.தி.மு.க., பிரமுகர்கள் சிலருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிய வருகிறது. இதனால், தி.மு.க., ஆட்சிக்காலத்தில் மணல் கொள்ளைக்கு துணை போய், 'பலத்த கவனிப்பு'க்கு ஆளான, கரூர் மாவட்ட அ.தி.மு.க., பிரமுகர்கள், கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை