சென்னை:சம வேலைக்கு சம ஊதியம் கோரி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், சென்னை எழும்பூர், ராஜரத்தினம் மைதானம் அருகே, நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இது குறித்து, இயக்கத்தின் மாநில பொதுச்செயலர் ராபர்ட் கூறியதாவது:
கடந்த 2009 செப்., 6ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, 8,370 ரூபாயும்; அவர்களுக்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, 5,200 ரூபாயும் அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்கப் பட்டது. 12 ஆண்டுகளுக்கு பின், தற்போது 27,000 ரூபாயாக உள்ளது. ஒரே பணி, ஒரே பதவி, ஒரே கல்வி தகுதி இருந்தும் ஊதியத்தில் மட்டும் பெரிய முரண்பாடு உள்ளது. அதேபோல், இரண்டு நாட்களுக்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, 2-0,600 ரூபாய் அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஓட்டுநருக்கு மாதம் 19,500 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆனால், பல்வேறு தகுதி தேர்வு, நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியருக்கும், அதே ஊதியம் வழங்கப்படுவது வேதனையாக உள்ளது. இந்த முரண்பாட்டை களைய வேண்டி, கடந்த நான்கு ஆண்டுகளாக போராடி வருகிறோம். அ.தி.மு.க., ஆட்சியை காட்டிலும், தி.மு.க., ஆட்சியில் தான் அதிக போராட்டங்களை நடத்தி உள்ளோம். ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளாகியும், இதுவரை அந்த குழு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. குழு வழங்கும் அறிக்கை அடிப்படையில் தான் முதல்வர் நடவடிக்கை எடுப்பார் எனில், அதுவரை நாங்கள் சிறையில் இருக்க முடிவு செய்துள்ளோம். வரும் செப்டம்பரில், மாணவர்கள் கல்வி பாதிக்காத வகையில், சிறை நிரப்பும் போராட்டம் நடத்த உள்ளோம். அதற்கு அடையாளமாக, இந்த ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.