மேயர் இயக்கி அமைச்சர் தயாரித்த நன்றி சொல்லும் கூலி படம் ஓடவில்லை சீமான் கிண்டல்
சென்னை:''மேயர் பிரியா இயக்கி, அமைச்சர் சேகர்பாபு மேற்பார்வையில் எடுக்கப்பட்ட, 'முதல்வருக்கு துாய்மை பணியாளர்கள் நன்றி சொல்லும்' திரைப்படம் ஓடவில்லை,'' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள, நா.த.க., தலைமை அலுவலகத்தில், கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்ற பின், சீமான் அளித்த பேட்டி: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை சேர்ந்த பிரதமர் மோடி, அந்த அமைப்பை பெருமையாக பேசுவதில் வியப்பு எதுவுமில்லை. சுதந்திரத்தை விரும்பாத ஆர்.எஸ்.எஸ்., பற்றி பேசிவிட்டு, தேசிய கொடியை ஏற்றியது தான் வேடிக்கை. 2010 முதல் கூட்டணி இல்லாமல் பயணித்து வருகிறோம்; இதில், மாற்றமில்லை. சென்னையில் துாய்மை பணி உள்ளிட்ட, எந்த வேலையையும் மாநகராட்சி செய்யாமல் தனியாருக்கு விட்டால், அந்த அமைப்பு எதற்கு.தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கிய பின், துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு என அறிவிக்கின்றனர். சாப்பாட்டுக்கு இல்லாத நிலையில், அவர்களை அரசு வைத்திருக்கிறது. தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளித்த பின், காலை உணவு, 10 லட்சம் நிவாரணம், மருத்துவ பரிசோதனை போன்றவற்றுக்கு அரசு செலவழிப்பதா. இதற்கு பதில், அரசே சம்பளம் கொடுத்து, அனைத்து வசதிகளையும் வழங்கி இருக்கலாம்; அவர்களும் அதைத்தான் கேட்கிறார்கள். அதற்கு பதில், துாய்மை பணியாளர்களாக, துணை நடிகர்களை நடிக்க வைத்து, முதல்வருக்கு நன்றி சொல்லும் காட்சிகளை, மேயர் பிரியா இயக்குகிறார். அதை அமைச்சர் சேகர்பாபு மேற்பார்வையிட்டு தயாரிக்கிறார். இரண்டு பேருக்கும் அனுபவம் இல்லாததால், படம் தோல்வி அடைந்து விட்டது. இவர்கள் அழைத்து வந்த கூலியும், அந்த 'கூலி' திரைப்படமும் காலியாக விட்டது. அரசு பள்ளிகளை மூடுவதற்கு, பிறப்பு விகிதம் குறைந்தது காரணமென்றால், தனியார் பள்ளிகளில் சேர்க்கை அதிகரிக்கும்போது, பிறப்பு விகிதம் அதிகரிக்கிறதா. எல்லா இடங்களுக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் கூட்டியே சொல்லி விட்டுத்தான் செல்கின்றனர். ஏன், பணம் பறிக்கத்தான். அவர்கள் எங்கெல்லாம் போனார்கள், பணம் பெற்றார்கள் என்ற விபரங்கள் என்னிடம் ஆதாரங்களோடு உள்ளன. சோதனை என்பது திசை திருப்பும் முயற்சி. வருமான வரித் துறை வாயிலாக, இதையேத்தான் செய்தனர். அவர்கள் வசூலிக்கும் தொகை போதவில்லை என்பதால், அமலாக்கத் துறையை உருவாக்கி உள்ளனர். இதுபோல, என்.ஐ.ஏ., விசாரணை அமைப்பை உருவாக்கி உள்ளனர். அது சிறப்பாக விசாரிக்கும் என்றால், சி.பி.ஐ., எதற்கு.இப்படி தெண்டமாக பலருக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. கவர்னர் திடுமென கிளம்பி, தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்கிறார். பா.ஜ., ஆளும் மாநிலங்களில் எத்தனை கொடூரங்கள் பெண்களுக்கு ஏற்பட்டன என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. மணிப்பூரில், எத்தனை பெண்கள் நிர்வாணமாக்கி கொடுமைப்படுத்தப்பட்டனர். பா.ஜ., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே? அதே நேரத்தில், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாக, தி.மு.க., -எம்.பி., கனிமொழி கூறுகிறார். ஆனால், வாய் பேச முடியாத சிறுமியை கூட சீரழிக்கின்றனர். எம்.பி., என்பதால் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. எங்கள் சகோதரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.