பயிற்சி மதிப்பெண் அடிப்படையிலேயே இனி பணி மூப்பு பட்டியலில் இடம்பெறலாம்
சென்னை: முப்பது ஆண்டுகளாக நீடித்து வந்த குளறுபடிக்கு தீர்வு காணும் வகையில், போலீஸ் எஸ்.ஐ.,க்களுக்கு அவர்கள் சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணிமூப்பு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் போலீஸ் எஸ்.ஐ.,க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 20 சதவீதம் போலீஸ் எஸ்.ஐ., பணிக்கு, ஏற்கனவே காவல் துறையில் இரண்டாம் நிலை, முதல் நிலை மற்றும் தலைமை காவலர்களாக பணிபுரிவோரும் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு தரப்படுகிறது. சீருடை பணியாளர் தேர்வு வாரியம் எழுத்து, உடல் தகுதி, நேர்முக தேர்வு நடத்தி, அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்கிறது. அவ்வாறு தேர்வு செய்யப்படும் போலீஸ் எஸ்.ஐ.,க்களுக்கு, போலீஸ் பயிற்சி கல்லுாரியில் ஓராண்டு அடிப்படை பயிற்சியும், காவல் நிலையங்களில் ஆறு மாதம் நடைமுறை பயிற்சியும் அளிக்கப்பட்டு, மதிப்பெண் வழங்கப்படும். ஆனால், பணிமூப்பு பட்டியல் தயாரிக்கும் போது, காவலர்களாக இருந்து போலீஸ் எஸ்.ஐ., பணியில் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டு வந்தது. சீனியாரிட்டி பட்டியலில், அவர்கள் தான் முன்னிலை பெறுவர்; பொதுப் பிரிவில் தேர்வானவர்கள் பின்னுக்கு தள்ளப்படுவர். மேலும், காவலர்களாக இருந்து போலீஸ் எஸ்.ஐ.,க்களாக தேர்வானவர்களுக்கு, போலீஸ் பயிற்சி கல்லுாரி அதிகாரிகள் ஆதரவாக இருப்பதுடன், கூடுதல் மதிப்பெண் வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், பணிமூப்பு பட்டியல் தயாரிப்புக்கு, பயிற்சி மதிப்பெண்ணும் கைகொடுக்கிறது என்பதால், பொதுப்பிரிவில் பணியில் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதை பொருட்படுத்தாமல், கடந்த 30 ஆண்டுகளாக பணிமூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டு வந்தது. இதில், பல குளறுபடிகளும் நடந்து வந்தன. இதனால், பொதுப் பிரிவில் பணியில் சேர்ந்தவர்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சமீபத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'போலீஸ் எஸ்.ஐ., பணியில் சேர்ந்தவர்களுக்கு, அவர்கள் சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தான் பணிமூப்பு பட்டியல் தயாரிக்க வேண்டும். 'போலீஸ் பயிற்சி கல்லுாரி வழங்கிய மதிப்பெண் அடிப்படையில் பணிமூப்பு பட்டியல் தயாரித்து, ஏற்கனவே பதவி உயர்வு அளிக்கப்பட்டவர்களுக்கு, எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தக்கூடாது' என உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், தமிழக அரசும் அரசாணை வெளியிட்டு உள்ளது. இதையடுத்து, கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தற்போது பணிமூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. மன உளைச்சல் இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: காவல் துறையில் பணிமூப்பு பட்டியல் தயாரிப்பில் ஏற்பட்டு வந்த குளறுபடியால், எங்களில் பல ஆயிரம் பேருக்கு குறித்த நேரத்தில் பதவி உயர்வு கிடைக்காமல் இருந்தது. இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினோம். இனி, அந்த கவலை இருக்காது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பின், 2011ல் எஸ்.ஐ.,க்களாக தேர்வு செய்யப்பட்ட 1,095 பேருக்கான பணிமூப்பு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இது நிம்மதி அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.