சென்னை:அ.தி.மு.க., ஆட்சியில், 2011- - 15ம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தார்.அப்போது பணி நியமனங்களுக்காக பணம் பெற்று மோசடி செய்ததாக, அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் உள்பட 40க்கும் மேற்பட்டோருக்கு எதிராக, 2015ல் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த மூன்று வழக்குகளிலும், முதல் நபராக செந்தில் பாலாஜி குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, இந்த வழக்கில், கடந்தாண்டு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் , நீதிபதி ஜி.ஜெயவேல் முன் விசாரணைக்கு வந்தன. செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் ஆஜராகினர். அவர்களுக்கு, கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.'கூடுதல் குற்றப்பத்திரிகையில் 2100க்கும் மேற்பட்டோர் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளதால், முதல் கட்டமாக, 100 பேர் குற்றப்பத்திரிகை நகல்களை பெற, 'சம்மன்' அனுப்ப வேண்டும்.அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கிய பின், இந்த வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்' எனக் கூறி விசாரணையை தள்ளிவைத்தார். நாளடைவில் நீர்த்து போகும்
நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பிரிவு மாநில செயலர் எஸ்.சங்கர் கூறியதாவது: செந்தில் பாலாஜிக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்குகளில், விரைவாக விசாரணை நடந்து, தீர்ப்பு வரக்கூடாது என்ற நோக்கத்தில், சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், 2,000க்கும் அதிகமானோர் சேர்க்கப்பட்டனரோ என்ற சந்தேகம் எழுகிறது.புதிய குற்றவியல் நடைமுறை சட்டப்படி, இந்த வழக்கை நடத்தும்போது, தினமும் புதிய சவால்களை நீதிமன்றம் சந்திக்க நேரிடலாம்.குற்றம்சாட்டப்பட்ட நபர்கள், தங்களின் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து வெளிவர, சட்ட ரீதியான தொடர் முயற்சிகளை எடுக்கும்போது, அதில் ஒரு முடிவு எட்டப்படும் வரை, சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கு அடுத்த கட்டத்துக்கு நகராது. இவ்வாறு கூறினார்.