உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., நிர்வாகி மீது பாலியல் புகார்: சி.பி.ஐ., விசாரிக்க வழக்கு

தி.மு.க., நிர்வாகி மீது பாலியல் புகார்: சி.பி.ஐ., விசாரிக்க வழக்கு

சென்னை:ஈரோடு அருகே கடனை திருப்பி கேட்ட பெண்ணுக்கு தி.மு.க., பிரமுகர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்பட்ட புகாரை, சி.பி.ஐ., விசாரிக்க கோரி தாக்கல் செய்த மனுவுக்கு, சி.பி.ஐ., மற்றும் ஈரோடு மாவட்ட காவல் துறை பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கொடுமுடியை சேர்ந்த, 35 வயதான பெண் தாக்கல் செய்த மனு: டெய்லர் கடை நடத்தி வரும் என்னிடம், ஜெயபிரபா என்பவர், 3 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். கடனாக பெற்ற பணத்தைத் திருப்பி தராததால், ஜெயபிரபாவுக்கு எதிராக கொடுமுடி நீதிமன்றத்தில், சிவில் வழக்கு தொடர்ந்தேன். கூடுதல் பணம் வழக்கு நிலுவையில் உள்ளபோது, ஜெயபிரபாவின் கணவர் ராமலிங்கம், என்னை தொடர்பு கொண்டு வங்கியில், 5 லட்சம் ரூபாய் 'பிக்சட் டிபாசிட்' உள்ளதாகவும், அந்த பணம் வந்தவுடன் கடன் தொகையை திருப்பி தருவதாகவும் கூறினார். இதை நம்பி, கூடுதலாக கேட்ட பணம், 2.5 லட்சம் ரூபாயையும் கொடுத்தேன். கடன் தொகையை திருப்பி தராத கணவன், மனைவி இருவரும், ஆவணங்களை திருடியதாக, ஈரோடு மலையம்பாளையம் போலீசில், என் மீது பொய் புகார் அளித்தனர். இந்த விபரம் தெரிந்த கொடுமுடி பஞ்சாயத்து தி.மு.க., செயலர், கொடுமுடி ஒன்றிய தி.மு.க., செயலரை சந்திக்க அறிவுறுத்தினார். அதன்படி, கொடுமுடி ஒன்றிய தி.மு.க., செயலர் சின்னச்சாமியை சந்தித்தேன். கொஞ்சம் 'அட்சஸ்ட்' செய்தால், பிரச்னையை முடித்து கொள்ளலாம் என கூறி, பாலியல் தொந்தரவு அளித்தார். அவரது செயல்கள் முழுதையும் மொபைல் போனில் வீடியோ எடுத்தேன். அவரின் நடவடிக்கை வெளியில் தெரிந்ததால், பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அந்த பதவி, அவரது மகனுக்கு தரப்பட்டது. விசாரணை இதையடுத்து, என்னை சின்னச்சாமி, அவரது மகன் ஆகியோர் மிரட்டினர். நான் மலையம்பாளையம் போலீசில் 2024 ஆக., 30ல் அளித்த புகார் மீது நடவடிக்கை இல்லை. ஆனால், சின்னச்சாமி, அவரது மகன் ஆகியோர் அளித்த பொய் புகாரில், என் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு, மலையம்பாளையம் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் உடந்தை. பிரச்னையை முடிக்கவில்லை எனில் சிறையில் அடைத்து விடுவதாக, இன்ஸ்பெக்டர் மிரட்டினார். அரசியல், காவல் துறை சம்பந்தப்பட்டு உள்ளதால், என் புகார் மீது நியாயமான விசாரணை நடக்காது என்பதால், வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், இந்த மனுவுக்கு, நான்கு வாரங்களில் ஈரோடு மாவட்ட காவல் துறை, சி.பி.ஐ., பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை