மாணவியருக்கு பாலியல் தொந்தரவு: பிரேமலதா கண்டனம்
சென்னை : 'மாணவியருக்கு மதுபானம் கலந்து கொடுத்து, பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் மற்றும் பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:கடந்த அக்., 22, 23ம் தேதிகளில், துாத்துக்குடியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நடந்தது. உடன்குடியில் உள்ள, 'சல்மா மெட்ரிகுலேஷன்' பள்ளியில் இருந்து மாணவியர் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் தலைமையில், ஒரு விடுதியில் தங்கவைத்து, அடுத்த நாள் காலையில் போட்டியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங், மாணவியருக்கு இரவு உணவு வாங்கி கொடுத்துள்ளார். குளிர்பானத்தில் மதுபானம் கலந்து கொடுத்து, பாலியல் தொந்தரவு செய்திருக்கிறார். காலையில் எழுந்த மாணவியர் தங்களது ஆடை களையப்பட்டு உள்ளதை பார்த்து, அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்களை உடனே அரசு கவனத்தில் கொண்டு, இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீதும், பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.