உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விமானத்தின் மீது லேசர் ஒளி பாய்ச்சுவது தீவிரமான குற்றம்: போலீசார் எச்சரிக்கை

விமானத்தின் மீது லேசர் ஒளி பாய்ச்சுவது தீவிரமான குற்றம்: போலீசார் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள வான்வெளியில் லேசர் கற்றை ஒளிக்கீற்று பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கி உள்ள போலீசார், அது சட்டப்படி குற்றம் என எச்சரித்துள்ளனர்.கடந்த மே 25ம் தேதியன்று துபாயில் இருந்து 326 பயணிகளுடன் சென்னைக்கு வந்த எமிரேட்ஸ் நிறுவனத்தின் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாரானது. அப்போது, அதன்மீது பரங்கிமலை பகுதியில் இருந்து பச்சை நிற லேசர் ஒளி அடிக்கப்பட்டது. இது குறித்து விமானிகள் விமானக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தனர். சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த ஒளி நின்று பிறகு, விமானம் பத்திரமாக தரையிறங்கியது. இந்தச் சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்னர் கடந்த 2023, 2024 ம் ஆண்டிலும் இதுபோன்று நடந்தது. இது குறித்து தகவல் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக் கொண்டு இருந்தனர். இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில், சென்னை விமான நிலையப் பகுதிகளில் வான்வெளியில் லேசர் ஒளி அடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அதற்கு உண்டான வழக்கு குறித்தும் சென்னை போலீசார் எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:சென்னை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள வான்வெளியில் லேசர் கற்றை ஒளிக்கீற்று பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் * லேசர் கற்றை விளக்குகளைப் பயன்படுத்துதல் மற்றும் ஒளி உமிழும் பொருட்களை சென்னை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள வான்வெளியில் வெளியிடுவது ஆகியவை விமானங்களின் பாதுகாப்பான செயல்பாட்டிற்கும், விமானப் பயணிகளுக்கும் அச்சுறுத்தலாக அமைகின்றன.*இந்த ஆபத்தான செயல் ஏற்கனவே உள்ள சட்ட விதிமுறைகளை மீறுவதுடன், நேரடித் தாக்கத்தால் கண்களில் படும்போது தற்காலிகப் பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடிய லேசர் கற்றை விளக்குகள், விமானங்களை தரையிறக்கும் போது விமானிகளுக்கு கவனச்சிதறலை ஏற்படுத்தி தீவிர அச்சுறுத்தலை உருவாக்குகின்றன. மேலும், பிரகாசமான லேசர் விளக்குகள் பொதுமக்களுக்கும் கண்களில் காயம் ஏற்படுத்தலாம்.*லேசர் ஒளிக்கீற்றின் மூலத்தை உடனடியாக அடையாளம் கண்டு அகற்ற முடியாவிட்டால், விமான நிலைய செயல்பாடுகள் கணிசமான நேரத்திற்கு தடைபடலாம் அல்லது நிறுத்தி வைக்கப்படலாம்.*விமான நிலையத்திற்கு அருகில் லேசர் ஒளிக்கற்றைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்துவதற்கான தடைகளை மீறுவது, BNS, 2023 பிரிவு 223 (அ)-வின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது. அதேபோல், விமான விதிகள், 1937, விதி 65 மற்றும் 66 ஆகியவை விமான நிலையத்திற்கு அருகில் லேசர் விளக்குகள் மற்றும் பிற வான்வழிச் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகின்றன. இதேபோல், ஒரு விமானத்தின் மீது லேசர் ஒளிக்கற்றையைப் பாய்ச்சுவது ஒரு தீவிரமான குற்றமாகும். இது BNS பிரிவு 125-வின் கீழ் வருகிறது. இச்சட்டம் 'மற்றவர்களின் வாழ்க்கை அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்' என்று விளக்குகிறது.*எனவே, விமான நிலையத்திற்கு அருகில் இதுபோன்ற ஒளி உமிழும் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Rangarajan Cv
மே 31, 2025 23:49

Better CRPF looks into this incident before any disaster happens. Irresponsible people should be apprehended ASAP.


Padmasridharan
மே 31, 2025 22:24

காவலர்கள் மக்களை ஒருமையில் மிரட்டி பேசி அவர்களின் மேல் மொபைல் லைட் அடித்து புகைப்படம், வீடியோ எடுப்பது, பொருட்களை புடிங்கி பணத்தை வாங்க பேரம் பேசுவது, தங்கள் வண்டியில் உட்கார வைத்து அறைக்கு கூட்டிச்செல்வது போன்ற குற்றங்கள் எந்தெந்த பிரிவுகளில் வரும் சாமி.


V Venkatachalam
மே 31, 2025 22:20

இது வெற்று அறிக்கை மட்டுமே. அன்று எமிரேட்ஸ் விமானத்தின் மீது லேசர் ஒளிக்கற்றையை அடித்தவன் யார்? என்பதை கண்டுபிடிக்க வில்லையா? அல்லது கண்டுபிடித்து அமுக்கியாச்சா? பின்னர் நடக்கபோகும் திட்டமிட்ட விபத்தின் ஒத்திகையாக இருக்கலாம். எட்டப்பன்கள் பரங்கிமலையில் இருந்து கொண்டு இந்த ஒத்திகையை நடத்தி இருக்கலாம். மத்திய அரசு அலட்சியமாக இருக்க கூடாது. தமிழ் நாடு கருப்பு பலூன் பறக்க விடும் நாடு என்பதை மறக்க கூடாது.


Ramesh Sargam
மே 31, 2025 20:54

அருகில் உள்ள அந்த பரங்கிமலையின் உச்சியில் காவலர்கள் பணியில் அமர்த்தப்படவேண்டும். லேசர் ஒளி பாய்ச்சுபவர்களை காவலர்கள் பாய்ந்து பிடித்து தண்டிக்கவேண்டும்.


மீனவ நண்பன்
ஜூன் 01, 2025 01:58

பாய்ந்து பிடிக்கறதா ? சிரிப்பே போலீஸ் தனியா நிக்கவே பயப்படுவாங்க ..


சமீபத்திய செய்தி