திருப்பூர்: ''திருப்பூரில் பல இடங்களில் தனியார் கேபிள் 'டிவி' இணைப்பு
ஒயர்கள், எம்.எல்.ஏ., நேர்முக உதவியாளர் தலையீட்டால் துண்டிக்கப்பட்டது;
இதனால், கேபிள் ஒளிபரப்பு பல மணி நேரம் தடைபட்டுள்ளது'' என்று, தமிழக
கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் பொது நல சங்கத்தினர் போலீஸ் கமிஷனரிடம் புகார்
அளித்தனர். இதேபோல், அரசு கேபிள் டிவி இணைப்புக்கான ஒயர்களும்
துண்டிக்கப்பட்டதாக, தனியார் கேபிள் ஆப்பரேட்டர்களை குற்றம்சாட்டி மற்றொரு
தரப்பினர் புகார் அளித்துள்ளனர்.தமிழக கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள்
பொது நல சங்கத்தினர், திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மனு
அளித்தார். மாநில செயலாளர் பிரகாஷ், மாவட்ட துணைச்செயலாளர் பாலகுமார்
ஆகியோர் கூறியதாவது:தனியார் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு
சிக்னல் வழங்குகின்ற முதன்மை அலுவலகமான காதர்பேட்டை பகுதியில் உள்ள
கட்டடத்தில் அடையாளம் தெரியாத, நான்கைந்து பேர், மாடி மீதேறி அனைத்து
கேபிள் ஒயர்களையும் துண்டித்தனர். இதேபோல், பல இடங்களில் ஒயர்கள்
வெட்டப்பட்டுள்ளன.'திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ.,
செல்வராஜின்(தி.மு.க.,) அலுவலகத்தில் இருந்து வருகிறோம். அவரது நேர்முக
உதவியாளரின் போன் நம்பரை கொடுத்து, அவர் தான் துண்டிக்க சொன்னார்.
வேண்டுமென்றால் பேசி கொள்ளவும்' என சொல்லி சென்றனர். பல மணி நேரமாக,
திருப்பூரில் கேபிள் டி.வி., ஒளிபரப்பும் இணைய சேவையும் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் அறப் போராட்டங்களில் ஈடுபடுவோம்.
மாநிலம் முழுவதும் உள்ள கேபிள் ஆபரேட்டர்களை ஒன்றிணைத்து கோட்டையை நோக்கி
பேரணி நடத்துவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கிடையே,
திருப்பூர் முத்து நகரை சேர்ந்த சிவராஜ் என்பவர், தனியார் கேபிள்
ஆப்பரேட்டர்கள் மீது குற்றம்சாட்டி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு
அளித்தார். மனுவில், ''அரசு கேபிள் ஆப்பரேட்டர்களை, தனியார் கேபிள்
ஆப்பரேட்டர்கள் இடையூறு செய்தும், ஒயர்களை துண்டித்தும் மிரட்டியும்
வருகின்றனர். இதன் காரணமாக, திருப்பூர் பகுதியில் அரசு கேபிள் சேவையை
மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்க முடியாத நிலை உள்ளது. அரசு கேபிள்
ஆப்பரேட்டர்களுக்கும், அரசு கேபிள் ஒயர்களுக் கும் பாதுகாப்பு வழங்க
வேண்டும்'' என்றனர்.
தவறான குற்றச்சாட்டு: எம்.எல்.ஏ., பேட்டி
எம்.எல்.ஏ., செல்வராஜிடம் கேட்டபோது, ''அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள், தனியார் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் தங்களை மிரட்டுவதோடு, இணைப்பையும் துண்டிப்பதாக என்னிடம் புகார் கூறினர். இதையடுத்து, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தந்து, சட்டரீதியான தீர்வு காணும் படி கூறினேன். இதையறிந்துகொண்டு, தனியார் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களும் மனு அளித்தனர். என் மீது தவறாக குற்றஞ்சாட்டுகின்றனர்'' என்றார்.