பா.ஜ., நிர்வாகி மீது துப்பாக்கி சூடா?
சென்னை: தமிழக பா.ஜ., செயலர் வினோஜ் செல்வம், 'சிதம்பரம் அருகே, பா.ஜ., சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு இருக்கிறது' என, தெரிவித்திருந்தார்.இதற்கு, தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவு வெளியிட்டுள்ள பதில்:வினோஜ் செல்வம் புகார் முற்றிலும் தவறான தகவல். பா.ஜ., சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் அஸ்கர் அலி என்பவர், இம்மாதம், 16ம் தேதி, முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள், 'ஏர்கன்' வாயிலாக தன்னை சுட்டிருக்கலாம் என்று, புகார் கொடுத்ததன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்தனர். அதில், 12 வயது சிறுவன் கருங்கல் ஜல்லியை கிரிக்கெட் பேட்டால் அடித்து விளையாடும்போது, அஸ்கர் அலியின் சட்டை பாக்கெட்டில் இருந்த மொபைல் போனில் பட்டு சேதமடைந்துள்ளது. 'ஏர்கன்' குண்டுபட்டதாக எவ்வித தடயமும் இல்லை என, கடலுார் மாவட்ட காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.