உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வடிவேலு வழக்கு பணிந்தார் சிங்கமுத்து

வடிவேலு வழக்கு பணிந்தார் சிங்கமுத்து

சென்னை:'நடிகர் வடிவேலு குறித்து தனிப்பட்ட முறையிலோ, தொழில் ரீதியாகவோ, அவதுாறாக பேச மாட்டேன்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், நடிகர் சிங்கமுத்து உத்தரவாதம் அளித்துள்ளார்.தனக்கு எதிராக நடிகர் சிங்கமுத்து 'யு டியூப்' சேனலில் அவதுாறாக பேட்டி அளித்ததாகவும், அதற்கு 5 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிடவும், அவதுாறாக பேச தடை விதிக்கவும், நடிகர் வடிவேலு மனுவில் கோரியிருந்தார். நடிகர் சிங்கமுத்து தாக்கல் செய்த பதில் மனுவில், 'நாங்கள் இருவரும் தமிழ் சினிமாக்களில் சேர்ந்து நடித்து உள்ளோம். 'தமிழ் சினிமாவில் வடிவேலுவின் வெற்றிக்கு பின்னணியில் நான் இருந்தேன். அதனால், அவர் பணமும், புகழும் சம்பாதித்தார். சென்னை மற்றும் புறநகரில் சொத்துக்கள் வாங்க, என்னை பயன்படுத்திக் கொண்டார். ஆனால், நான் 7 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சித்தரித்தார்' என கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, 'வடிவேலுவுக்கு அவதுாறு ஏற்படுத்தும் வகையில், எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன்' என உத்தரவாதம் அளிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வழக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, சிங்கமுத்து தாக்கல் செய்த மனுவில் 'இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, வடிவேலு குறித்து தனிப்பட்ட முறையிலோ, தொழில் ரீதியாகவோ, அவதுாறாக எதுவும் பேச மாட்டேன். 'அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக, எந்த தகவலையும் பரப்ப மாட்டேன்' என உத்தரவாதம் அளித்துள்ளார். இதையடுத்து, விசாரணையை, ஜனவரி 21க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ