சிவகாசி ஜெயலட்சுமி வழக்கு இன்ஸ்பெக்டர்கள் சாட்சியம் : மாஜிஸ்திரேட் உத்தரவு
மதுரை: ''சிவகாசி ஜெயலட்சுமி நகை மோசடி வழக்கில் இன்ஸ்பெக்டர்கள் சாட்சியம் தேவையில்லை,'' என கூறி அரசு தரப்பு மனுவை டிஸ்மிஸ் செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். கோவை நகை வியாபாரி முருகவேல். இவரிடம் சிவகாசி ஜெயலட்சுமி ரூ.மூன்றரை லட்சத்திற்கு நகைகளை வாங்கி பணம் தராமல் ஏமாற்றினார். முருகவேல் புகாரின்பேரில், சிவகாசி ஜெயலட்சுமி, தந்தை அழகிரிசாமி, சகோதரர் சீனிவாசன், உறவினர்கள் அழகர்சாமி, நாராயணசாமி மீது எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடக்கிறது. ஜெயலட்சுமி வக்கீல் மோகன்தாஸ் ஏற்கனவே ஐகோர்ட் கிளையில், வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு பெற்றிருந்தார். நேற்று மாஜிஸ்திரேட் (பொறுப்பு) கதிரவன் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு சாட்சிகள் இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், மணிவண்ணன், ஷாஜகான் நேற்றும் ஆஜராகவில்லை. அரசு வக்கீல் உதயகுமார், இன்ஸ்பெக்டர்கள் 3 பேரும் ஆஜராக அவகாசம் கோரி மனு செய்தார். மாஜிஸ்திரேட் அதை ஏற்கவில்லை. இன்ஸ்பெக்டர்களின் சாட்சியம் தேவையில்லை என கூறி மனுவை டிஸ்மிஸ் செய்தார். கேள்வி விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தார்.