சமூக வலைதள கணக்குகள் நோட்டீஸ் தராமல் முடக்கம்
சென்னை:தமிழகத்தில், விமான போக்குவரத்து தொடர்பாக, சமூக வலைதளங்களில் கருத்துகள் மற்றும் படங்களை பதிவிட்டு வந்தவர்களின், சமூக வலைதள பக்கங்களை, திருச்சி 'சைபர் கிரைம்' போலீசார் முடக்கியது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஒவ்வொறு மாநிலத்திலும், அந்தந்த கலாசாரம், முதலீடுகள், கல்வி, உள்கட்டமைப்பு, விமானம் மற்றும் போக்குவரத்து தொடர்பான, சமூக வலைதள பக்கங்கள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் விமான போக்குவரத்து தொடர்பாக, திருச்சி, கோவை நகரங்களை சேர்ந்த, எட்டு நபர்கள், தங்கள் 'எக்ஸ்' வலைதள பக்கத்தில், கருத்துகளை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், விமான நிலையம் தொடர்பான புகைப்படங்களை, பதிவேற்றம் செய்ததாகக் கூறி, அவர்களின் சமூக வலைதள பக்கங்கள், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முடக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, திருச்சி ஏவியேஷன் சமூக வலைதள பக்கத்தின் உரிமையாளர் கூறியதாவது:மத்திய விமான போக்குவரத்து துறையின் தகவல்களை, மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக, இந்த பக்கம், கடந்த 2020ல் துவக்கப்பட்டது. இதில் திருச்சியின் முக்கியத்துவம்,வளர்ந்து வரும் விமான போக்குவரத்து குறித்த தகவல்களை பதிவிட்டு வந்தோம். மக்களும் ஆதரவு அளித்து வந்தனர். மக்களுக்கு தகவல் தெரிவிக்கும் நோக்கிலேயே, தகவல்கள் பகிரப்பட்டன. வேறு எந்த நோக்கமும் கிடையாது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, எங்கள் சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. திருச்சி விமான நிலைய இயக்குநரின் புகார் அடிப்படையில், திருச்சி சைபர் கிரைம் போலீசார், சமூக வலைதள கணக்குகளை முடக்கி உள்ளனர். இது குறித்து 'நோட்டீஸ்' எதுவும் அளிக்கவில்லை. எதுவும் சொல்லாமல் முடக்கியது கவலை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, திருச்சி விமான நிலைய இயக்குநர் ஞானேஸ்வர ராவை கேட்டபோது, பதில் அளிக்க மறுத்துவிட்டார்.