சூரியசக்தி மின் உற்பத்தி 7,000 மெகா வாட்டை தாண்டியது
சென்னை:தமிழகத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி, எப்போது இல்லாத வகையில், நேற்று முன்தினம் மதியம், 12:10 மணிக்கு, 7,034 மெகா வாட்டாக அதிகரித்தது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, ஒட்டுமொத்த சூரியசக்தி மின் உற்பத்தி திறன், 10,600 மெகா வாட். மழை தவிர்த்த மற்ற நாட்களில், சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, தினமும் சராசரியாக, 4 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகிறது. இம்மாதம், 19ம் தேதி பகல், 12:54 மணிக்கு, 6,858 மெகா வாட், அன்று காலை முதல் மாலை வரை, 5.20 கோடி யூனிட்களும் உற்பத்தியானது.இதுவே, உச்ச அளவாக இருந்தது. இந்நிலையில், எப்போதும் இல்லாத வகையில், நேற்று முன்தினம் பகல், 12:10 மணிக்கு, சூரியசக்தி மின் உற்பத்தி, 7,034 மெகா வாட்டாக அதிகரித்தது. அன்று காலை முதல் மாலை வரை, 5.39 கோடி யூனிட்கள் உற்பத்தியாகின.