சென்னை: மழை வெள்ளத்தில் ரயில் தண்டவாளங்கள் மூழ்கியதால், பாண்டியன் உள்ளிட்ட தென்மாவட்ட விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு, 12 மணி நேரம் தாமதமாக சென்னை வந்தன. 'பெஞ்சல்' புயல் காரணமாக, புதுச்சேரி மற்றும் கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆறுகள் உடைப்பெடுத்ததால், ரயில் மற்றும் சாலை மேம்பாலங்கள் மழை நீரில் மூழ்கின. குறிப்பாக, விழுப்புரம் - முண்டியம்பாக்கம் இடையே, ஒரு ரயில்வே பாலத்தின் மேல் அளவுக்கதிகமாக வெள்ளம் ஓடியது.பயணியர் பாதுகாப்பு கருதி, தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. கன்னியாகுமரி, செங்கோட்டை, மதுரை, கொல்லம், ராமேஸ்வரம், மன்னார்குடி உட்பட 12 விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இந்த ரயில்கள் விழுப்புரம், திருக்கோவிலுார், திருவண்ணாமலை, வேலுார் கன்டோன்மென்ட், அரக்கோணம், பெரம்பூர் வழியாக எழும்பூருக்கு மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.புதுச்சேரி - எழும்பூர், எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத், எழும்பூர் - மதுரை தேஜஸ், சென்னை - குருவாயூர், வைகை உட்பட 15க்கும் மேற்பட்ட ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.மாற்று பாதையிலும் சிக்கல்
விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் செல்லும் போது, திருக்கோவிலுார் அடுத்துள்ள பகுதியில், ரயில்வே மேம்பாலத்தில் மழைநீர் அதிகளவில் தேங்கி, ஆபத்தான நிலையில் இருந்தது. இதையடுத்து, விரைவு ரயில்கள் வரிசையாக மூன்று மணி நேரம் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அந்த பாலத்தில் மழை நீர் குறைந்த நிலையில், உரிய பாதுகாப்பு ஆய்வுக்கு பின், மெதுவாக விரைவு ரயில்கள் இயக்கப்பட்டன. அதனால், 12 மணி நேரம் வரை தாமதமாக எழும்பூர் வந்தன. இதனால், பயணியர் கடும் அவதிப்பட்டனர்.
மீண்டும் சேவை
விழுப்புரம் - முண்டியம்பாக்கம் இடையே உள்ள ரயில்வே பாலத்தில், நேற்று காலை 10:50 மணிக்கு பின்னரே வெள்ள நீர் ஓரளவுக்கு வடிந்தது.இதையடுத்து, ரயில்வே தொழில் மற்றும் பாதுகாப்பு அலுவலர்கள், பாலத்தில் ஆய்வு செய்தனர். அதன்பின், மணிக்கு 10 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன.பின்னர், படிப்படியாக வேகம் அதிகரிக்கப்பட்டது. தற்காலிகமாக ரயில் சேவை நிறுத்தப்பட்ட செங்கல்பட்டு - விழுப்புரம் தடத்தில், நேற்று காலை 11:00 மணி முதல் படிப்படியாக ரயில்கள் இயக்கப்பட்டன. இதற்கிடையே, ரத்து செய்யப்பட்ட 15 விரைவு ரயில்களுக்கான பயணியர் கட்டணம் முழுமையாக திருப்பி அளிக்கப்படும் என்று, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.
உணவு, தண்ணீர் இன்றி அவதி
ரயில் பயணியர் சிலர் கூறியதாவது: மாற்றுப் பாதையில் ரயில்கள் இயக்கப்படுவதை அறிந்ததும், விழுப்புரம், திருக்கோவிலுார் உள்ளிட்ட பகுதிகளில், பயணியர் சிலர் ரயிலில் இருந்து இறங்கி, நீண்ட துாரம் நடந்து சென்று, பஸ்களில் பயணித்தனர். ஆனால், முதியோர், குழந்தைகள் என குடும்பத்துடன் பயணித்தவர்கள், வேறு வழியின்றி ரயில்களில் இருந்தனர். பல மணி நேரமாக காத்திருந்த பயணியருக்கு போதிய உணவுகள், குடிநீர் ஏற்பாடு செய்யப்படவில்லை. அடுத்தடுத்து வந்த ரயில் நிலையங்களில் இறங்கி, கிடைத்த உணவுகளை வாங்கி சாப்பிட்டனர். வேலுார் கன்டோன்மென்ட் வந்த பின்னரே, பயணியருக்கு உணவுகள் ரயிலில் விற்பனை செய்யப்பட்டன. நேற்று காலை 5:10 மணிக்கு எழும்பூர் வர வேண்டிய ரயில்கள், 12 மணி நேரம் தாமதமாக வந்துள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.