தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை நாளை அமல்
சென்னை : தெற்கு ரயில்வேயின் 2025ம் ஆண்டுக்கான புதிய கால அட்டவணை, நாளை முதல் அமலாகிறது. வரும் ஆண்டுக்கான புதிய கால அட்டவணையை தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டது. அதில், புதிய ரயில்கள் அறிவிப்பு, ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் வழங்குவது போன்ற புதிய அறிவிப்புகள் இல்லாதது, பயணியரிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, ரயில் பயணியர் சங்கங்களின் நிர்வாகிகள் பாஸ்கர், முருகையன் ஆகியோர் கூறியதாவது: புதிய கால அட்டவணை ஏமாற்றத்தை தந்துள்ளது. குறிப்பாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புதிய ரயில்கள், திருவள்ளூரிலும், கும்மிடிப்பூண்டியிலும் விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஏற்கனவே அமல்படுத்திய திட்டங்களையே புதிய அட்டவணையில் சேர்த்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.