வங்ககடலில் நாளை உருவாகுது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக் கடலில், நாளை மறுநாள் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக்கடலில், அந்தமான் அருகே கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது, ஆந்திரா, ஒடிசா கரையை கடந்த நிலையில், ஆந்திரா, தெலுங்கானாவில், வரலாறு காணாத வகையில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lxks9b29&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடலில், நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும். மேற்கு திசை காற்று வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரியில், இன்று, இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது, வரும், 8ம் தேதி வரை தொடரலாம்.சென்னையில் அடுத்த, இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில பகுதிகளில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதிகள், அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் அடுத்த, மூன்று நாட்களுக்கு, மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்திலும் இடையிடையே, 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆந்திர கன மழை 80 ரயில்கள் ரத்து
ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால், மூன்றாவது நாளாக நேற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 80க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.சென்னையில் இருந்து புதுடில்லி, பனாரஸ், ஆமதாபாத், புவனேஸ்வர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டிய, 50க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. இதேபோல, சென்ட்ரல் - சாலிமர், சென்ட்ரல் - புதுடில்லி, தாம்பரம் - ஐதராபாத் சார்மினார் உட்பட, 30க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: பயணியரின் பாதுகாப்பு கருதி, ஆந்திரா வழியாக செல்ல வேண்டிய 20க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சில ரயில்களை மாற்றுப்பாதையில் இயக்கி வருகிறோம். இந்த தகவல்களை, பயணியருக்கு எஸ்.எம்.எஸ்., வாயிலாக அறிவித்து வருகிறோம். எனவே, பயணியர் தங்களது பயணத்துக்கு முன், எஸ்.எம்.எஸ்., தகவல்களை சரிபார்த்து கொள்ளவும். மேலும், 044- -2535 4995, 044- --2535 4151 என்ற உதவி எண்களை தொடர்பு கொண்டு தகவல் பெறலாம். கன மழை பெய்து சேதமடைந்துள்ள விஜயவாடா - கூடூர் தடம், காஜிபேட் வழித்தடங்களில் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அந்த வழியாக விரைவு ரயில்கள் இயக்குவது தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.