உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை

பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை

சென்னை:''சபைக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அன்புமணி ஆதரவு பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்தார். சட்டசபையில் பா.ம.க.,விற்கு ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதில், ஜி.கே.மணி, அருள் ஆகியோர் ராமதாஸ் ஆதரவாளர்களாகவும், வெங்டேஸ்வரன், சதாசிவம், சிவகுமார் ஆகியோர் அன்புமணி ஆதரவாளர்களாகவும் செயல்படுகின்றனர். ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ., ஜி.கே.மணியின், சட்டசபை குழு தலைவர் பதவியை பறிக்க கோரி, அன்புமணி தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடந்த 14ம் தேதி முதல், அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகரிடம் வலியுறுத்தி வருகின்றனர். தங்கள் கோரிக்கை ஏற்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று கருப்பு சட்டை அணிந்து, மூன்று பேரும் சட்டசபைக்கு வந்தனர். மேலும் தங்கள் கோரிக்கை தொடர்பாக பேச அனுமதிக்க வேண்டும் என, சபாநாயரிடம் வலியுறுத்தினர். அப்போது தனியார் மருத்துவமனைகளில் கிட்னி முறைகேடு நடப்பது தொடர்பான, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது, விவாதம் நடந்து கொண்டிருந்தது. பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்களின் செயலால், சபாநாயகர் அப்பாவு அதிருப்தி அடைந்தார். தொடர்ந்து சபைக்கு இடையூறு ஏற்படுத்தினால், நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இதையடுத்து, தங்களுக்கு பேச வாய்ப்பு வழங்காததை கண்டித்து, அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !