உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநாட்டு செலவை ஏற்ற தி.மு.க., திருமாவை புகழும் சீனிவாசன்

மாநாட்டு செலவை ஏற்ற தி.மு.க., திருமாவை புகழும் சீனிவாசன்

''கள்ளக்குறிச்சியில் வி.சி.,க்கள் சார்பில், திருமாவளவன் நடத்திய மதுஒழிப்பு மாநாட்டுக்கு, அ.தி.மு.க.,வினரை அழைத்ததன் வாயிலாக, ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்து விட்டார்,'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். மதுரையில் தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் நடந்த உண்ணாவிரத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சீனிவாசன் பேசியதாவது:தமிழகத்தில் முழுமையான மது ஒழிப்பை வலியுறுத்தி, கடந்த அக்., 2ல், கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பெரிய மாநாடு நடத்தியது.

பதற்றமானார்

ஜாதியையும், மதத்தையும் முன்னிறுத்தி அரசியல் செய்யும் பா.ஜ., - பா.ம.க., தவிர, அனைத்து கட்சிகளும் மாநாட்டுக்கு வரலாம். ஏன், மதுஒழிப்பு கொள்கையில் உறுதியாக இருப்பர் என்றால், அ.தி.மு.க.,வும் கூட மாநாட்டுக்கு வரலாம் என பகிரங்கமாக, திருமாவளவன் அறிவிப்பு வெளியிட்டார். அந்த சமயத்தில், தமிழகத்துக்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். இந்த செய்தி அவரை எட்டியதும், அவர் பதற்றமானார். அமெரிக்காவில் இருந்து திரும்பியதும், திருமாவளவனை அறிவாலயம் வரவழைத்துப் பேசினார்.'மாநாட்டில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும் கலந்து கொள்ளலாம் என்று பகிரங்க அழைப்பு விடுக்கிறீர்களே! ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுத்தால், அது அரசையும்; தி.மு.க., கூட்டணியையும் எதிர்ப்பது போல் ஆகாதா?' என்று கேட்டுள்ளார். 'மதுவிலக்கு விஷயத்தில் யாரெல்லாம் ஆதரவாக இருக்கின்றனரோ, அவர்களை வைத்து நடத்துகிறேன். மது ஒழிப்பு விஷயத்தில், தி.மு.க.,வும் உறுதியாக இருக்கும் என்றால், உங்கள் கட்சி சார்பிலும் கலந்து கொள்ளலாம்' என, திருமாவளவன் கில்லாடியாக பேசியிருக்கிறார்.

கில்லாடி

உடனே, 'அந்த மாநாட்டில் தி.மு.க.,வும் கலந்து கொள்ளும். எங்கள் சார்பில், கட்சியின் மூத்த தலைவர்கள் ஆர்.எஸ்.பாரதி மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் பங்கேற்று பேசுவர்; ஆனால், அரசுக்கு எதிராக எவ்வித தீர்மானமும் மாநாட்டில் போடக்கூடாது; தேவையானால், மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் போட்டுக் கொள்ளுங்கள்' என முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். கூடவே, 'மாநாட்டுக்கான அனைத்து செலவுகளையும், அமைச்சர்கள் நேரு மற்றும் வேலு ஆகியோர் ஏற்றுக்கொள்வர்; செலவு குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம்' என சொல்லியுள்ளார். இதையடுத்து, தி.மு.க.,வினர் செலவிலேயே, அவர்கள் நடத்தும் ஆட்சிக்கு எதிராக மிகப்பெரிய மாநாட்டை நடத்திவிட்டார் திருமாவளவன்.இதனால்தான், அவரை கில்லாடி அரசியல்வாதி என கூறுகிறேன். தி.மு.க., செலவு செய்த ஒரு மாநாட்டில், வி.சி., தொண்டர்களை உட்கார வைத்த பெருமை திருமாவளவனை சாரும். இப்படி ஒரே கல்லில் பல மாங்காய் அடித்துள்ளார் திருமாவளவன். அ.தி.மு.க.,வுக்கும் அழைப்பு என்று சொன்ன ஒரு வார்த்தைக்காக, பல கோடி ரூபாய் செலவிலான மாநாட்டை, தி.மு.க., நடத்த வைத்திருக்கிறார்.அ.தி.மு.க., கூட்டணிக்கு திருமாவளவன் கட்சி போகப் போகிறது என்று பத்திரிகைகளில் எழுதினால், என்ன விளைவு வரும் என்று திருமாவளவனுக்கும் தெரியும்; ஸ்டாலினுக்கும் தெரியும். அதைத்தான் ஆயுதமாகப் பயன்படுத்தினார் திருமா. அது அவருக்கு வெற்றியைக் கொடுத்து விட்டது. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

அவதுாறானது!

கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்புக்காக விடுதலை சிறுத்தைகள் நடத்திய மாநாடு, முழுக்க முழுக்க எங்கள் கட்சி சார்பிலானது. அம்மாநாட்டுக்கான செலவை, தி.மு.க., ஏற்றுக் கொண்டதாக சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. இது எங்களுக்கு எதிரானது மட்டுமல்ல அபாண்டமானது; அவதுாறானது. மாநாடு எப்படி நடத்தப்பட்டது என்பது பொதுமக்களுக்கு நன்கு தெரியும். பொதுமக்கள் ஆதரவோடு வி.சி.,க்கள் தொடர்ந்து இயங்கும். யாரிடமும் பணம் பெற்று, மாநாடு நடத்த வேண்டிய அவசியம், வி.சி.,க்களுக்கு இல்லை.திருமாவளவன், நிறுவனர், வி.சி., -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ