உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எஸ்.ஆர்.எம்., ஹோட்டல் வழக்கு: மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

எஸ்.ஆர்.எம்., ஹோட்டல் வழக்கு: மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

அரசு நிலத்தில், எஸ்.ஆர்.எம்., குழுமம் நடத்தி வந்த ஹோட்டலை காலி செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. திருச்சி காஜாமலை பகுதியில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான இடத்தில், எஸ்.ஆர்.எம்., குழுமம் ஹோட்டல் நடத்தி வந்தது. இந்த இடத்திற்கான குத்தகை காலம் கடந்த ஆண்டு முடிவடைந்தது. இதையடுத்து, அந்த இடத்தை கையகப்படுத்தும்படி தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து, எஸ்.ஆர்.எம்., குழுமம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு, நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன் ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'எஸ்.ஆர்.எம்., குழுமம் தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையில், 20 கோடி ரூபாயை அடுத்த ஆறு வாரத்திற்குள் செலுத்த வேண்டும். 'அந்தத் தொகையை செலுத்திய பிறகே, இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியும். பணத்தை செலுத்தியதற்கான ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது. அதுவரை ஹோட்டலை காலி செய்ய இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், 20 கோடி ரூபாய் நிலுவை தொகையை எஸ்.ஆர்.எம்., குழுமம் தமிழக அரசுக்கு செலுத்தாமல் இருப்பதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். 'நிலுவை தொகையை செலுத்தாததால், எஸ்.ஆர்.எம்., குழுமம் நடத்தி வந்த ஹோட்டல் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது' எனக்கூறி, எஸ்.ஆர்.எம்., குழுமத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். - டில்லி சிறப்பு நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N Sasikumar Yadhav
அக் 28, 2025 11:58

தமிழக சுற்றுலாத்துறையின் இடத்தை குத்தகைக்காலம் முடிந்ததும் கையகப்படுத்த சொன்ன நீதிமன்றம் இந்துமத கோயிலின் இடத்தை குத்தகைக்காலம் முடிந்தும் ஆக்கிரமித்து கொண்டிருக்கிற லயோலாவை அப்புறப்படுத்த தயங்குவது எதற்காக. லயோலா சிறுபான்மை என்கிற கோட்டாவுக்குள் வருவதால் தயங்குகிறதா நீதிமன்றம்.


புதிய வீடியோ