அய்யப்ப சங்கமம் விழா கேரள முதல்வர் அழைப்பை ஏற்க மறுத்தார் ஸ்டாலின்
சென்னை : 'முன்னரே முடிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாக, திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பவள விழாவில் பங்கேற்க இயலவில்லை' என, கேரள முதல்வருக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கேரள மாநிலம், பம்பையில், செப்டம்பர் 20ம் தேதி, திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பவள விழா நிகழ்ச்சியான, 'லோக அய்யப்ப சங்கமம்' நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இது தொடர்பாக, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, முதல்வர் ஸ்டாலின் அனுப்பியுள்ள பதில் கடிதம்: முன்னரே முடிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாக, திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பவள விழாவில் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலை உள்ளது. தமிழக அரசின் சார்பில் ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்பர். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.