ஈரோடு: ''விவசாயிகளுக்கு களையாக இருந்தது கடந்த அ.தி.மு.க., ஆட்சி,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அருகே இரண்டு நாள் வேளாண் கண்காட்சி அரங்கை நேற்று திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:தமிழகத்தில், 2 லட்சம் இலவச விவசாய மின் இணைப்பு வழங்க அறிவித்து, இதுவரை, 1 லட்சத்து, 84,000 இணைப்புகள், 2,184 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட்டுள்ளது. இலவச மின்சாரத்துக்கு மட்டும் இதுவரை, 26,223 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.தேசிய அளவில் பயிர் உற்பத்தி திறனில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. குறிப்பாக சிறுதானியங்கள், கேழ்வரகு, எள், துவரையில் முதலிடம், மக்காச்சோளம், மொத்த எண்ணெய் வித்துகள், கரும்பு உற்பத்தியில் இரண்டாம் இடம், குறு தானியங்கள், நிலக்கடலையில், மூன்றாம் இடம் என வளர்ச்சி அதிகரித்துள்ளது.தோளில் துண்டு போட்டுக்கொண்டு, வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் இல்லை. விவசாயிகளுக்கு பிரச்னை என்றால், முதல் ஆளாக துணை நிற்கிறோம். கடந்த, 4 ஆண்டில், 21 லட்சம் விவசாயிகளுக்கு, 1,630 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கி உள்ளோம்.மதுரை மல்லி இயக்கம், பலா இயக்கம் என பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்துகிறோம். உழைப்புக்கான பலனை விவசாயிகளே பெற வேண்டும் என்பதற்காக, 125 உழவர் சந்தைகளை புதுப்பித்து, புதிதாக, 14 உழவர் சந்தைகள் உருவாக்கி உள்ளோம். 8,579 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு என வழங்கி உள்ளோம்.வளமான நிலங்களில் களைகள் முளைக்கும். அப்படிப்பட்ட களையாக கடந்த, அ.தி.மு.க., ஆட்சி விவசாயிகளுக்கு இருந்தது. எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தனர். விவசாயிகள் தற்கொலை அதிகமாக நடந்தது.மத்திய அரசின், மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியில் விவசாயிகள் போராடியபோது, கூச்சமே இல்லாமல் அச்சட்டத்தை ஆதரித்து பேசி, பச்சை துரோகம் செய்தவர்கள் அ.தி.மு.க.,வினர். அதனால்தான், விவசாயிகள் அ.தி.மு.க.,வை தோற்கடித்தனர். அதுபோன்ற களைகள் நாட்டில் இருந்து மொத்தமாக களையப்பட வேண்டும். இவ்வாறு பேசினார்.