மத்திய அரசை பின்பற்றி, மாநில உயர் கல்வி நிறுவனங்களின் தர வரிசை பட்டியலை வெளியிட, தமிழக உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அடுத்த ஆறு மாதங்களில், தர வரிசை பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மத்திய கல்வி அமைச்சகம், நாடு முழுதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின், கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி உட்பட பல்வேறு செயல்பாடுகளை மதிப்பிட்டு, தேசிய கல்வி நிறுவனங்கள் தர வரிசை எனும் என்.ஐ.ஆர்.எப்., பட்டியலை, ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. கலை, அறிவியல் கல்லுாரிகள், இன்ஜினியரிங் கல்லுாரிகள், மருத்துவக் கல்லுாரிகள் உட்பட, 16 வகையான தர வரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. இவை, உயர் கல்வியை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு உதவியாக உள்ளது. கல்வி துறை இந்நிலையில், என்.ஐ.ஆர்.எப்., தர வரிசை பட்டியலுக்கு போட்டியாக, எஸ்.ஐ.ஆர்.எப்., எனும் மாநில உயர் கல்வி நிறுவனங்களுக்கான தர வரிசை பட்டியலை தயார் செய்து வெளியிட, தமிழக உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 'இந்தப் பட்டியல், 75 லட்சம் ரூபாய் செலவில், மாநில உயர் கல்வி மன்றத்தால் வெளியிடப்படும்' என, உயர் கல்வித்துறை அறிவித்து, அதற்கான பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. அதே நேரத்தில், மாநில தர வரிசை பட்டியல் தயார் செய்வதற்கான மதிப்பீட்டு செயல்முறைகளை, மாநில உயர் கல்வி மன்றம் தயார் செய்துள்ளது. அந்த மதிப்பீட்டு செயல்முறைகள், கல்லுாரிகளில் இருக்கும் என்.ஐ.ஆர்.எப்., ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளன. பட்டியல் இது தொடர்பாக, அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டு, அடுத்த ஆறு மாதங்களில், மாநில தர வரிசை பட்டியல் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றி, உயர் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாநில உயர் கல்வி நிறுவனங்களின் தர வரிசை பட்டியல் தயார் செய்ய, உயர் கல்வி மன்றம் வடிவமைத்த மதிப்பீட்டு செயல்முறைகள், கல்லுாரிகளின் என்.ஐ.ஆர்.எப்., ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவர்கள், மதிப்பீட்டு செயல்முறைகளின் நிறை, குறைகள் குறித்து, பேராசிரியர்களுடன் விவாதித்து, அதற்கான கருத்துகளை மன்றத்திடம் வழங்குவர். சென்னை பல்கலையின் கீழ் இயங்கும், 138 கல்லுாரிகளைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து கேட்பு கூட்டம், வரும் 25ல் பல்கலை வளாகத்தில் நடக்கிறது. அதில், நிறை, குறைகள் குறித்து பேசப்பட்டு நிவர்த்தி செய்யப்படும். அதேபோல், மற்ற பல்கலையிலும் கருத்து கேட்பு கூட்டங்கள் நடக்கும். அதில் தெரிவிக்கப்படும் கருத்துகள் அடிப்படையில், மதிப்பீட்டு செயல்முறை இறுதி செய்யப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து கலை, அறிவியல், இன்ஜினியரிங், மருத்துவம், மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்பு கல்லுாரி, சட்டக் கல்லுாரி என பல்வேறு பிரிவுகளில் தர வரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஆறு மாதங்களில் வெளியிடப்படும். இது, அடுத்த கல்வியாண்டில் மாணவர்கள் உயர் கல்வியை தேர்வு செய்ய உதவியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -