உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை வனப்பகுதியில் உருக்கு கம்பி வேலி: ஐகோர்ட் நீதிபதிகள் நேரில் பார்வையிட முடிவு

கோவை வனப்பகுதியில் உருக்கு கம்பி வேலி: ஐகோர்ட் நீதிபதிகள் நேரில் பார்வையிட முடிவு

சென்னை; மனித, விலங்கு மோதல்களை தடுக்கும் வகையில், கோவை வனப்பகுதியில் உருக்கு கம்பி வேலி அமைக்கும் பணிகளை, செப்., 5 மற்றும் 6ம் தேதி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நேரில் சென்று பார்வையிட உள்ளனர். வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் நுழைவதால், மனித, விலங்கு மோதல்கள் ஏற்படுகின்றன. இதேபோல, அதிக உயிரிழப்புகளும் பயிர் சேதமும் ஏற்படுகின்றன. இதை தடுக்கும் வகையில், ஓசூர் பகுதியில் உருக்கு கம்பி வேலி அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கோவையில் தொண்டாமுத்துார் -- தடாகம் இடையே, 10 கி.மீ., துாரத்திற்கு உருக்குகம்பி வேலி அமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். மனுவில், 'ஓசூரில் உருக்கு கம்பி வேலி அமைக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும். யானைகள் வழித்தடங்கள் அமைக்கும் வரை, உருக்குகம்பி வேலி அமைக்க கூடாது' என, குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில், முதன்மை தலைமை வன பாதுகாவலர் ராகேஷ்குமார் டோக்ராவின் அறிக்கையை, வனத்துறை சிறப்பு பிளீடர் டி.சீனிவாசன் தாக்கல் செய்தார். அதன் விபரம்: கோவை வனப்பகுதியில், 30 கி.மீ., தொலைவில் உருக்குகம்பி வேலி அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதில், 10 கி.மீ., தொலைவுக்கு கம்பி வேலி அமைக்க, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2011- - 2022 வரை யானை தாக்கியதில், 147 பேர் உயிரிழந்து உள்ளனர். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு, 11.35 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டு உள்ளது. பயிர் மற்றும் குடியிருப்பு பகுதிகளை, யானைகள் சேதம் ஏற்படுத்துவதை தடுக்க, அகழி, 'சோலார்' வேலி போன்ற பாரம்பரிய வழிமுறைகள் பயன் அளிக்கவில்லை என்பதால், பரிசோதனை முறையில், உருக்குகம்பி வேலி அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. கோவை வனப்பகுதி, 693.48 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. இதில், சுமார் 350 கி.மீ., நீளத்திற்கு குடியிருப்புகள் அமைந்துள்ளன. இப்பகுதியில், மனித, விலங்கு இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், இந்த பகுதியில் யானைகள், 9,710 முறை வழிதவறிச் சென்றுள்ளன. உருக்கு கம்பி வேலி அமைக்கும் திட்ட அறிவிப்பை, கடந்தாண்டு நவ., 6ல் முதல்வர் அறிவித்தார். திட்டத்துக்கு, 5 கோடி ரூபாய் நிதி, கடந்த பிப்., 4ல் ஒதுக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டது. நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி, 'உருக்குகம்பி வேலி அமைக்கும் முன், அதன் சாதக, பாதகம் என்னென்ன என்பது குறித்த அறிவியல்பூர்வமான ஆய்வு மேற்கொள்ள வேண்டும். யானை வழித்தடங்களை அறிவிக்கும் பணியில், வனத்துறை ஈடுபட்டுள்ளது. கோவை பகுதியில் உள்ள வழித்தடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு அறிவிக்கப்படும் வரை, வேலி அமைக்கும் பணியை நிறுத்தி வைக்க வேண்டும்' என கூறி, கம்பி வேலி அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், 'இந்த விஷயத்தில் தனிப்பட்ட ஆய்வு தேவை என நாங்கள் கருதுகிறோம். எனவே, மேட்டுப்பாளையம், உருக்குகம்பி வேலி அமைக்கப்பட உள்ள பிற இடங்களை, சிறப்பு பிளீடர் டி.சீனிவாசன், நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் டி.மோகன், சி.மோகன், ராகுல்பாலாஜி மற்றும் சந்தானராமன் ஆகியோருடன், செப்., 5 மற்றும் 6 ஆகிய இரு நாட்கள் நேரில் சென்று பார்வையிட உள்ளோம்' என தெரிவித்து, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை