மதுரையில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை * முதல்வர் ஸ்டாலின் தகவல்
சென்னை:'மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில், இயல்பு நிலையை திரும்ப, போர்க்கால அடிப்படையில், அனைத்து பணிகளும் நடந்து வருகின்றன' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:மதுரை மாவட்டத்தில், நேற்று முன்தினம் பெய்த கன மழை காரணமாக, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் ஆகியோரை அனுப்பி வைத்தேன்.மதுரை மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு, கள நிலவரம் குறித்து அறிந்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தி உள்ளேன். குடியிருப்பு பகுதிகளில் மழை நீரை வடிய வைக்க, ராட்சத மின் மோட்டார்கள், பொறியாளர்கள், பணியாளர்கள் அருகில் உள்ள நகராட்சிகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.மருத்துவ முகாம்கள், 20 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதி மக்கள், தேவையான வசதிகளுடன், மூன்று முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தலைமைச்செயலர், பேரிடர் மேலாண்மை ஆணையர் ஆகியோர் பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப, போர்க்கால அடிப்படையில் அனைத்து பணிகளும் நடந்து வருகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சென்னை அறிவாலயத்தில், முதல்வர் அளித்த பேட்டி:மதுரையில் இரவோடு இரவாக, தேங்கிய மழை நீரை எடுத்தாகி விட்டது. எட்டு இடங்களில் தான் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது; வேறு ஒன்றும் பிரச்னை இல்லை. நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன. அனைத்து ஊர்களிலும், பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
'அடிப்படை உதவிகள் இல்லை!'* பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:
மதுரை மாநகரத்தின் பெரும் பகுதிகளை, வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. பல பகுதிகளிலும், இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு இதுவரை உணவு உள்ளிட்ட அடிப்படை உதவிகள்கூட வழங்கப்படவில்லை. பத்து நிமிடங்களில் 4.5 செ.மீ., மழை என்பது எதிர்பார்க்க முடியாத ஒன்றுதான். எனினும், காலநிலை மாற்றத்தின் விளைவாக, இத்தகைய நிகழ்வுகள் அடிக்கடி நடக்கும் என்பதை கணித்து, எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள வசதியாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, அரசும், மாநகராட்சியும் செய்திருக்க வேண்டும்.மழை நீரை வைகை ஆற்றுக்கு திருப்பி விட, பந்தல்குடி கால்வாய் உட்பட, பல கால்வாய்களை, அரசும், மாநகராட்சியும் துார் வாரி இருக்க வேண்டும். துார் வாரியதாக கணக்கு காட்டப் பட்டாலும், களத்தில் எந்தப் பணியும் நடக்கவில்லை. இதில், தமிழக அரசும், மாநகராட்சியும் படுதோல்வி அடைந்து விட்டன.* அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: மதுரையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அடிப்படை வசதிகளைகூட செய்து தராத, தி.மு.க., அரசின் அலட்சிய போக்கு கண்டனத்துக்கு உரியது. மதுரையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தருவதோடு, இனி வரும் பெருமழைக் காலங்களில், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.