மாணவி லாவண்யா மரண வழக்கு: சி.பி.ஐ., அறிக்கை தாக்கல்
- டில்லி சிறப்பு நிருபர் - தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யா என்ற மாணவி, 2022ல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சித்தி கொடுமை, பள்ளியில் கொடுத்த கூடுதல் பணிச்சுமை போன்றவை தற்கொலைக்கு காரணமாக கூறப்பட்டது. ஆனால் பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாலேயே மாணவி விஷம் குடித்ததாக சர்ச்சை எழுந்தது. இதை போலீசார் மறுத்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தில், சி.பி.ஐ., தரப்பு, நிலை அறிக்கையை தற்போது தாக்கல் செய்துள்ளது. அதன் விபரம்: மாணவி லாவண்யா பேசிய வீடியோ பதிவில் மதமாற்றம் பற்றி எதுவும் கூறவில்லை. பள்ளியில் படித்து விட்டு வெளியேறிய மாணவர்கள் பலரது சான்றிதழ்களை முழுமையாக ஆய்வு செய்ததில், அந்தப் பள்ளியில் படித்த மாணவர்கள் யாரும் பள்ளியை விட்டு வெளியேறும் போது மதம் மாறவில்லை என்பது தெரியவந்தது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.