சென்னை:''மாணவர்கள் கல்வியை இறுகி பற்றிக் கொள்ள வேண்டும். அரசு உருவாக்கி தரக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த, 'நான் முதல்வன்' திட்டத்தின், மூன்றாம் ஆண்டு வெற்றி விழாவில், 'வெற்றி நிச்சயம்' என்ற திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து பேசியதாவது:மாணவர்களுக்கான வாய்ப்புகளை எளிதாக்க வேண்டும் என்பதற்காகவே, நான் முதல்வன் திட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த 2021ல் ஆட்சி பொறுப்பேற்றபோது, மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் திறமை மிக்கவர்களை, அறிவில் சிறந்தவர்களாக, உலகை வெல்லக்கூடிய திறமை பெற்றவர்களாக, வளர்த்தெடுக்க வேண்டும் என, உறுதி எடுத்துக் கொண்டேன்.அந்த உறுதியோடு உழைத்ததால், இன்றைக்கு வரலாறு காணாத வளர்ச்சியை தமிழகம் அடைந்துள்ளது. நாட்டிலேயே வளர்ச்சி விகிதத்தில், 'நம்பர் ஒன்' மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்த வளர்ச்சியை, அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல, மாணவர்களுடன் நானும் தயாராகி விட்டேன். நடப்பாண்டு யு.பி.எஸ்.சி., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 50 பேர், நான் முதல்வன் திட்ட மாணவர்கள்.'நான் முதல்வன்' திட்டம் வரிசையில், 'வெற்றி நிச்சயம்' திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களோடு இணைந்து, தமிழகம் முழுதும், 18 முதல் 35 வயதுள்ள, படித்த வேலை இல்லாத இளைஞர்கள், படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் ஆகியோரை கண்டறிந்து, அவர்களுக்கு குறுகிய கால திறன் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான பயிற்சித் தொகையை தமிழக அரசு ஏற்க இருக்கிறது. மாணவர்கள் கல்வியை இறுகி பற்றிக் கொள்ள வேண்டும். நாங்கள் உருவாக்கி தரக்கூடிய வாய்ப்புகள் எல்லாவற்றையும், மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.