உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுப்பிரமணிய சிவா மணிமண்டபம் "வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறப்பு

சுப்பிரமணிய சிவா மணிமண்டபம் "வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறப்பு

தர்மபுரி : தர்மபுரியை அடுத்த பாப்பாரப்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட, தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தை, சென்னையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் திறந்து வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் பிறந்தவர் சுப்பிரமணிய சிவா. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டதால், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 1908ம் ஆண்டு, சேலம் சிறைக்கு அவர் மாற்றப்பட்ட போது, தொழுநோயால் அவதிப்பட்டார். சிறையில் இருந்து வெளியில் வந்த சுப்பிரமணிய சிவாவுக்கு ஏற்பட்ட தொழுநோயை காரணம் காட்டி, பிரிட்டிஷ் அரசு, ரயிலில் பயணம் செய்ய தடை விதித்தது.

இருப்பினும், கட்டை வண்டியில் சென்று, பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக பிரசாரங்கள் செய்தார். இறுதி காலத்தில், தர்மபுரியை அடுத்த பாப்பாரப்பட்டியில், பாரதமாதா ஆசிரமத்தை ஏற்படுத்தி, இளைஞர்களுக்கு சுதந்திர தாகத்தை ஏற்படுத்தினார். கடந்த 1925ம் ஆண்டு, ஜூலை 23ம் தேதி பாப்பாரப்பட்டியில், அவர் இறந்தார்.

இறுதியில் வாழ்ந்த பாரதிபுரம் ஆசிரமத்தில், அவர் அடக்கம் செய்யப்பட்டார். ஆசிரமத்தில் சிவா இருந்த போது, அனைத்து மதத்தினரும் வணங்கும் வகையில், பாரத மாதா கோவில் எழுப்ப வேண்டும் என ஆசைப்பட்டார். 1922ம் ஆண்டு சித்தரஞ்சன்தாஸ் பாரதிபுரத்தில், பாரத மாதா கோவில் கட்ட அடிக்கல் நாட்டிச் சென்றார். 1925ல் சுப்பிரமணிய சிவா இறந்து விட்டதால், அவரது ஆசையை நிறைவேற்ற முடியவில்லை.

கடந்த 1984ம் ஆண்டு நடந்த அவரது நூற்றாண்டு விழாவின் போது, அப்போதைய சபாநாயகர் ராஜாராம், பாப்பாரப்பட்டியில் உள்ள அவரது சமாதிக்கு அருகே, நூற்றாண்டு விழா நினைவுத் தூணை திறந்து வைத்தார்.

சுப்பிரமணிய சிவாவுக்கு மணி மண்டபம் கட்ட, கடந்த 2010ம் ஆண்டு, 40 லட்ச ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அதே ஆண்டு, ஆகஸ்ட் 19ம் தேதி மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. பணிகள் நிறைவடைந்து, நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்த அரசு விழாவில், தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம் திறப்பு விழா நடந்து. வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் ஜெயலலிதா, மணி மண்டபத்தை திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ