உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போரூர் தி மைண்ட் கேர் கிளினிக்கில் தற்கொலை தடுப்பு உதவி மையம் துவக்கம்

போரூர் தி மைண்ட் கேர் கிளினிக்கில் தற்கொலை தடுப்பு உதவி மையம் துவக்கம்

சென்னை:போரூர் 'தி மைண்ட் கேர் கிளினிக்'கில், 24 மணி நேர தற்கொலை தடுப்பு உதவி மையமான 'ஜீவன் லைன்' துவங்கப்பட்டுள்ளது. உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி, 'மாஸ்டர் மைண்ட் அறக்கட்டளை, ஹஸ்கி டெக்னாலஜியுடன் இணைந்து, போரூர் 'தி மைண்ட் கேர்' கிளினிக்கில், தற்கொலை தடுப்புக்கான உதவி மையம் துவக்கியுள்ளது. இந்த மையத்தை, 'ஹஸ்கி டெக்னாலஜி' இயக்குநர் காசி ராஜேந்திரன், மாஸ்டர் மைண்ட் அறக்கட்டளை தலைவர் டாக்டர் லட்சுமி டி.கே., ஆகியோர் திறந்து வைத்தனர். தொடர்ந்து, மேம்படுத்தப்பட்ட 'தி மைண்ட் கேர்' செயலியையும் துவக்கி வைத்தனர். இது குறித்து, ஹஸ்கி டெக்னாலஜி இயக்குநர் காசி ராஜேந்திரன் கூறியதாவது: ஹஸ்கி நிறுவனம் வணிகத்திற்கு அப்பாற்பட்டு, சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், பல உயிர்களை காப்பாற்றுதல் மற்றும் வலுவான சமூகத்தை உருவாக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், மன ஆரோக்கியம் மற்றும் தற்கொலை தடுப்புக்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், 'ஜீவன் லைன்' மையத்தை எங்கள் நிறுவனம் ஆதரிக்கிறது. நெருக்கடியில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் மிகவும் தேவையான நம்பிக்கை மற்றும் ஆதரவை பெறுவதை உறுதி செய்யும், மாஸ்டர் மைண்ட் அறக்கட்டளையுடன் நாங்கள் கைகோர்ப்பதில் பெருமைப்படுகிறோம். இவ்வாறு அவர் கூறினார். மாஸ்டர் மைண்ட் அறக்கட்டளை தலைவர் டாக்டர் லட்சுமி டி.கே., கூறியதாவது: இந்தியாவில் 2022ல் அரசு கணக்கெடுப்பின்படி, 1.71 லட்சம் பேர் தற்கொலை செய்து இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை தற்போது மேலும் அதிகரித்து இருக்கும். பல்வேறு காரணங்களால் மன அழுத்தப் பாதிப்பு ஏற்படுகிறது. ஒருவர் குழந்தையாக இருக்கும்போதில் இருந்து மன அழுத்தம் துவங்குகிறது. மன அழுத்தங்களை பொறுத்தவரை, உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கும்போதும், அவர்களுக்கான நம்பிக்கையை வழங்கும்போதும், தற்கொலை போன்ற எண்ணங்களை தவிர்க்க முடியும். இதற்காகவே, 24 மணி நேரம் இயங்கக்கூடிய 1800 202 8760 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் தி மைண்ட் கேர் செயலி ஆகியவை செயல்பாட்டில் உள்ளன. மன அழுத்தம், தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்கள், எந்நேரமும் எவ்வித கட்டணமின்றி தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கு, நிபுணத்துவம் பெற்ற மனநல ஆலோசகர்கள், தொடர்ச்சியான ஆலோசனைகளை வழங்குவர். அழைப்பவர்களின் தனி உரிமை முழுமையாக பாதுகாக்கப்படும். தற்கொலை தீர்வு அல்ல; உடனடி இலவச ஆலோசனை பெற தொடர்பு கொள்ளலாம். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மனநல ஆலோசனை பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை