உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட்டிற்கு இரட்டை ஆயுள்

நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட்டிற்கு இரட்டை ஆயுள்

புதுடில்லி : மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை வழக்கில், அவரது சீனியர் மாணவரான குற்றவாளி ஜான் டேவிட்டிற்கு செஷன்ஸ் கோர்ட் விதித்த இரட்டை ஆயுள் தண்டனையை, சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.

சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமி மகன் நாவரசு(17); 1996ம் ஆண்டு, கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக் கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த நாவரசு, அதே ஆண்டு நவம்பர் 6ம் தேதி, வகுப்பிற்கு சென்றவர் விடுதிக்குத் திரும்பவில்லை.நவம்பர் 7ம் தேதி, சென்னையில் மாநகர பஸ் ஒன்றில் கேட்பாரற்று கிடந்த சூட்கேசில், தலை, கை, கால்கள் வெட்டி எடுக்கப்பட்ட ஆண் உடல் மட்டும் கிடந்தது. இதுகுறித்து சென்னை மாநகர போலீசார் வழக்கு பதிந்து, கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து விசாரித்து வந்தனர்.நாவரசு காணாமல் போனது குறித்து அவரது தந்தை பொன்னுசாமி, நவம்பர் 10ம் தேதி கொடுத்த புகாரின் பேரில், அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், நாவரசுவை நவம்பர் 6ம் தேதி மதியம், அதே மருத்துவக் கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர் ஜான் டேவிட் தனது அறைக்கு அழைத்துச் சென்றது தெரிய வந்தது.நவம்பர் 11ம் தேதி ஜான் டேவிட், ராஜமன்னார்குடி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை போலீசார், நவம்பர் 18ல் தங்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில், தேர்வு எழுதி விட்டு வந்த நாவரசுவை, ஜான் டேவிட் வழிமறித்து தனது அறைக்கு அழைத்துச் சென்று ராகிங் செய்துள்ளார்.அப்போது, ஜான் டேவிட் தாக்கியதில் நாவரசு மயங்கி விழுந்துள்ளார். அவர் இறந்து விட்டதாகக் கருதிய ஜான் டேவிட், வெளியில் தெரியாமல் இருக்க, தனது படிப்பிற்காக ஆய்வகக் கூடத்தில் பயன்படுத்தும், 'டிசக்ஷன்' கருவிகளை பயன்படுத்தி நாவரசுவின் தலை, கைகள் மற்றும் கால்களை தனித்தனியாக துண்டித்துள்ளார்.

தலையை பாலிதீன் கவரில் சுற்றி, கல்லூரி வளாகத்தில் உள்ள குட்டையில் வீசியுள்ளார். பின்னர் உடலை பாலிதீன் கவரில் சுற்றி, பெரிய சூட்கேசில் அடைத்துள்ளார். அதேபோன்று, கைகள் மற்றும் கால்களை தனியாக, 'பேக்' செய்து, சென்னை செல்லும் ரயிலில் ஏற்றிச் சென்றுள்ளார். செல்லும் வழியில், கைகள் மற்றும் கால்களை ஆற்றில் வீசியுள்ளார். உடல் இருந்த சூட்கேசை, சென்னையில் டவுன் பஸ்சில் வைத்துவிட்டு சிதம்பரம் திரும்பி வந்ததும், போலீசார் சந்தேகிக்கவே கோர்ட்டில் சரணடைந்தது தெரிய வந்தது.அதைத் தொடர்ந்து, போலீசார் ஏற்கனவே பதிவு செய்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர். ஜான் டேவிட் குறிப்பிட்ட அண்ணாமலை பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள குட்டையில் தேடியதில், நாவரசுவின் தலை சிக்கியது; செங்கல்பட்டு அருகே கால்கள் சிக்கின. இதையும், சென்னையில் கண்டெடுக்கப்பட்ட உடலில் இருந்து எடுத்த திசுக்களை ஆய்வு செய்ததில், இறந்தது நாவரசு என்பது உறுதி செய்யப்பட்டது.கல்லூரியில், 'ராகிங்' கொடுமையால் மாணவர் நாவரசு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம், உலகளவில் பெரும் பீதியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தியது.ஜான் டேவிட் மீது 1997ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி, கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், அரசு தரப்பில் சிறப்பு வக்கீலாக முன்னாள் நீதிபதி கந்தசாமியும், ஜான் டேவிட் தரப்பில் பிரபல வக்கீல் விருத்தாசலம் ரெட்டியாரும் ஆஜராகி வாதிட்டனர்.

நீதிபதி சிங்காரவேலு முன்னிலையில் நடந்த இந்த வழக்கில், 78 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்; 120 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.வழக்கை விசாரித்த நீதிபதி சிங்காரவேலு, 1998, மார்ச் 11ம் தேதி தீர்ப்பு கூறினார். அதில், ராகிங் காரணமாக நாவரசுவை கொடூரமான முறையில் கொலை செய்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும், கொலை செய்த தடயங்களை மறைத்ததற்காக மற்றொரு ஆயுள் தண்டைன என, ஜான் டேவிட்டிற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். அதைத் தொடர்ந்து ஜான் டேவிட், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.கடலூர் செசன்ஸ் கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஜான் டேவிட், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்படாததால், ஜான் டேவிட்டை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

உலகமே அச்சுறும் வகையில் நடந்த கொடூர கொலை வழக்கில் கைதான ஜான் டேவிட்டிற்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஐகோர்ட் ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு, டில்லி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, முகுந்தகம் சர்மா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், 'மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசுவை கொடூரமான முறையில் கொன்ற, அவரது சீனியர் மாணவர் ஜான் டேவிட்டிற்கு, கடலூர் செஷன்ஸ் கோர்ட் விதித்த இரட்டை ஆயுள் தண்டனை சரியானதே' என, தீர்ப்பளித்தது.

ஜான் டேவிட் சரணடைய உத்தரவு : நாவரசு கொலை வழக்கில் நீதிபதிகள் எழுதிய 41 பக்க தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:விசாரணை நடவடிக்கைகளில் நடந்துள்ள சிறு தவறுகளை வைத்து, வழக்கில் உண்மையில்லை என, ஒட்டு மொத்தமாக கூறி விட முடியாது. இந்த வழக்கில் பலமான சூழ்நிலை ஆதாரங்கள் உள்ளன. ஜான் டேவிட் தான் குற்றவாளி என்பதை தர்க்க ரீதியாகவும், நுட்பமான வகையிலும் விசாரணை அதிகாரிகள் நிரூபித்துள்ளனர். இந்த வழக்கை ஐகோர்ட் கையாண்ட விதம் சரியில்லை. சாட்சியங்கள் எல்லாம் திசை திருப்பப்பட்டுள்ளன.ஜான் டேவிட்டிற்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை, அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டியதில்லை. தண்டனை பெற்ற ஜான் டேவிட் உடனடியாக சிறை அதிகாரிகளிடம் சரண் அடைய வேண்டும். இல்லையெனில், அவருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த வழக்கின் உண்மை நிலவரங்களை பார்க்கையில் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மிகக் கொடூரமான முறையில் இளம் மாணவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டியது கொடூரமான மற்றும் அச்சமூட்டும் செயல்.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் இருக்கிறாரா ஜான் டேவிட்? மாணவர் நாவரசு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜான் டேவிட்டிற்கு, கடலூர் செஷன்ஸ் கோர்ட் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. அதை எதிர்த்து ஜான் டேவிட், சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, போதிய சாட்சி இல்லாத காரணத்தால், ஜான் டேவிட்டை விடுதலை செய்து உத்தரவிட்டார்.ஆயுள் தண்டனையிலிருந்து விடுதலையான அவர், கிறிஸ்தவ மத போதகர் படிப்பு முடித்து ஆஸ்திரேலியா சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஐகோர்ட் தீர்ப்பை தள்ளுபடி செய்து, செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பை தற்போது சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது.

இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, ஜான் டேவிட் தாமாகவே முன் வந்து கோர்ட் அல்லது போலீஸ் ஸ்டேஷனில் சரணடைய வேண்டும். தற்போது அவர் வெளிநாட்டில் உள்ளதால், அங்குள்ள இந்திய தூதரகத்தில் கூட சரணடையலாம்.அப்படி இல்லாத பட்சத்தில், கோர்ட் மூலம் தண்டனை பிடி ஆணை பிறப்பிக்கப்படும். அதன் பிறகு அவர் உள்நாட்டில் இருந்தால், அவரது பாஸ்போர்ட் முடக்கம் செய்யப்பட்டு பின்னர் போலீசாரால் கைது செய்யப்படுவார். வெளிநாட்டில் இருந்தால், நம் நாட்டில் உள்ள அந்நாட்டின் தூதரகத்திற்கும், அந்த நாட்டில் உள்ள நம் நாட்டு தூதரகத்திற்கும் கோர்ட் உத்தரவு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் ஜான் டேவிட்டை அந்நாட்டு போலீசார் கைது செய்து, அங்குள்ள நம் நாட்டு தூதரகத்தில் ஒப்படைப்பர். பின்னர் இந்தியா கொண்டு வரப்பட்டு, கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்படுவார் என, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ஜான் டேவிட் குறித்த தகவல் சேகரிக்க 2 தனிப்படை: எஸ்.பி., : சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகுறித்து கடலூர் எஸ்.பி., அஷ்வின் கோட்னீசிடம் கேட்டபோது, 'இந்த வழக்கில் ஜான் டேவிட்டிற்கு கடலூர் கோர்ட் அளித்த தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு எங்களுக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் ஜான் டேவிட் தற்போது எங்குள்ளார் என்பது குறித்த தகவல்களை சேகரிக்க அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், சிதம்பரம் டவுன் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோர்ட் உத்தரவு கிடைத்த பின் ஜான் டேவிட்டை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை