சென்னை: டில்லியில் கடந்த செப்., இறுதியில் நடந்த, உலக உணவு மாநாட்டின் வாயிலாக, தமிழகத்தில் உணவு தொழிலில் ஈடுபட்டுள்ள, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, பல நாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அதிகளவில், 'ஆர்டர்'கள் குவிந்துள்ளன.மத்திய உணவு பதப்படுத்துதல் துறை சார்பில், உலக உணவு இந்தியா - 2025 மாநாடு, டில்லி பாரத் மண்டபத்தில், கடந்த மாதம், 25ம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு நடந்தது. இந்த மாநாட்டை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதில், ரஷ்யா, ஜெர்மனி, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளை சேர்ந்த மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த உணவு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், வணிகர்கள் உட்பட பல ஆயிரம் பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்தும் பல்வேறு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.இது தவிர, பிரதமர் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தில் பயனடைந்துள்ள, 30க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு, தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை சார்பில் கண்காட்சியில் அரங்கு அமைப்பதற்கு இலவச வசதிகள் செய்து தரப்பட்டன. பெரிய தொழில் நிறுவனங்களான, ஐ.டி.சி., ஹிந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே ஆகியவை தமிழகத்தில் முதலீடு செய்ய பேச்சு நடத்தியுள்ளனதொழில் துறையினர் சொல்வதென்ன?
திருப்பத்துார், 'காயல்' சமையல் மசாலா நிறுவனத்தின் நிறுவனர் பாய்ஷா காதர்: உடனடி சமையலுக்கான பொருட்கள் உட்பட, 37 வகையாக பொருட்களை தயாரித்து, விற்கிறோம். உணவு மாநாட்டில், கேட்டரிங் நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள் போன்ற 50 நிறுவனங்கள் எங்களின் தயாரிப்புகளை வாங்கியுள்ளன. மேலும், 20 நிறுவனங்கள் தொடர்ந்து வாங்க விருப்பம் தெரிவித்துள்ளன.திருநெல்வேலி, 'கிரீன் ஹெல்த் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தின் உரிமையாளர் விஜய்: முருங்கை இலை பவுடர், மூலிலை பொருட்களை பவுடர் செய்து, உள்நாட்டில் விற்பனை செய்வதுடன், ஏற்றுமதி செய்கிறோம். கண்காட்சி அரங்கு கட்டணம் மட்டும் தான் இலவசம். உணவு, போக்குவரத்து செலவுகளை ஏற்க வேண்டியுள்ளதால், கூடுதல் செலவாகிறது. வரும் காலங்களில் இந்த அரசு செலவுகளை அரசே ஏற்க வேண்டும். மதுரை, 'ஷாத்விக் நியூட்ரி பெஸ்ட்' நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷினி: சிறுதானியங்களில் இருந்து பிஸ்கட், நியூட்ரி பார், மிக்சர், முருக்கு, இனிப்புகள், நுாடூல்ஸ், பாஸ்டா, அவல், ரவை, சிற்றுண்டி உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்களை தயாரிக்கிறோம். கண்காட்சியில் பங்கேற்றதால், உ.பி., ம.பி., டில்லி உள்ளிட்ட வட மாநில நிறுவனங்கள், எங்கள் தயாரிப்புகளை வாங்க அதிகம் விருப்பம் தெரிவித்துள்ளன. கடலுார், சுயஜோதி ஹெர்பல் புராடக்ட்ஸ் நிறுவன உரிமையாளர் கயல்விழி கூறியதாவது: மூலிகை பொருட்களை பயன்படுத்தி டீ பவுடர், நெல்லிக்காய் ஊறல், கீழாநெல்லி ஊறல் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து, விற்கிறோம். இந்த மாநாட்டின் வாயிலாக டில்லி, குஜராத், பீஹார், புதுச்சேரியில் இருந்து மூலிகை டீ பவுடருக்கு ஆர்டர் கிடைத்துள்ளது. நொச்சி தைலத்திற்கு ரஷ்யாவில் இருந்து ஆர்டர் கிடைத்து உள்ளது. பனம்பழம் காபிக்கு, தென் கொரியாவில் இருந்தும், காஷ்மீரின் லடாக்கில் இருந்தும் ஆர்டர்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.