உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மும்மொழி கொள்கையை தமிழகம் எப்போதும் ஏற்காது * தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி பேச்சு

மும்மொழி கொள்கையை தமிழகம் எப்போதும் ஏற்காது * தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி பேச்சு

சென்னை:''மத்திய அரசின் மும்மொழி கொள்கையை, தமிழக அரசு எப்போதும் ஏற்காது,'' என, துணை முதல்வர் உதயநிதி பேசினார்.தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான், மாநில கல்வி திட்டங்களுக்கு நிதி வழங்கப்படும் என, மத்திய அரசு கூறியுள்ளதை கண்டித்து, தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், உதயநிதி பேசியதாவது:ஹிந்தி திணிப்பு மிரட்டலுக்கு அடிபணிவோம் என்று மத்திய அரசு நினைத்தால், அது கனவிலும் நடக்காது. ஹிந்தியை படித்தால் தாய்மொழியான தமிழ் மழுங்கி விடும். ராஜஸ்தான் மாநில மக்களின் தாய் மொழியான ராஜஸ்தானி, பீஹார் மக்களின் தாய்மொழியான பிஹாரி, உ.பி.,யின் தாய்மொழி போஜ்புரி ஆகியவற்றை, ஹிந்தி மொழி முழுங்கி விட்டது. அம்மாநில மக்கள் ஹிந்தி, ஆங்கிலம் மொழிகளை அடுத்து, தங்கள் தாய் மொழியை மூன்றாவது மொழியாக எடுத்து படிக்கின்றனர். அதனால் தான், அவர்கள் தாய் மொழியை மறந்து விட்டனர்.தமிழகத்தில் ஹிந்தி மொழியை ஏற்றுக்கொண்டால், தமிழ் மொழி அழிந்து விடும். அ.தி.மு.க., ஆட்சி நடந்த போது, மத்திய அரசு நீட்டிய கோப்புகளில் கையெழுத்திட்டு, அடிமை ஆட்சியாக இருந்தது. நாங்கள் அப்படி இருக்க மாட்டோம். சுயமரியாதை உள்ள திராவிட மாடல் அரசு தமிழகத்தில் நடக்கிறது. மத்திய அரசின் மும்மொழி கொள்கையை, தமிழக அரசு என்றைக்கும் ஏற்காது. இருமொழி கொள்கை இருக்கும் போது, மூன்றவாது மொழியாக ஹிந்தியை திணிக்க முயற்சிக்க வேண்டாம். தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதியை கொடுத்து விடுங்கள். அதை விடுத்து, எங்களை மிரட்டினால், எப்படி அதை எடுக்க வேண்டும் என்பதும் எங்களுக்கு தெரியும். எடுக்க வேண்டிய நிலைக்கு எங்களை தள்ளி விடாதீர்கள். நம் உரிமைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். இல்லையென்றால், இன்னொரு மொழி போரை சந்திக்க தமிழகம் தயங்காது. இது மாணவர்களின் பிரச்னை, தமிழ் மொழி சம்பந்தப்பட்ட பிரச்னை, ஒவ்வொரு மானவர்களின் உரிமைக்கான பிரச்னையாக இருப்பதால், இந்த ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.மும்மொழி கொள்கையில், அ.தி.மு.க., அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும். அவதுாறு பரப்புவதை விடுத்து, எங்களுடன் இணைந்து போராட வாருங்கள். கட்சிக்கு அப்பாற்பட்டு, ஓரணியில் நின்று அனைவரும் போராட முன்வர வேண்டும். 'மாடியிலிருந்து பூக்களும், குப்பையும் கொட்டப்படலாம். உயர்ந்த இடத்திலிருந்து அது விழுவதால் ஏற்க வேண்டும் என்பது கிடையாது' என, அண்ணாதுரை கூறியுள்ளார். அதுபோல உயர்ந்த இடத்திலிருந்து நம் மீது மும்மொழி கொள்கை என்ற குப்பையை கொட்ட நினைக்கின்றனர்; அதை ஏற்றுக் கொள்ள முடியாது.ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில், நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரை துறந்தனர். மும்மொழி கொள்கையை எதிர்க்க, ஆயிரம் பேர் உயிரை விடவும், தமிழ் மொழியை காக்கவும் தயாராக இருக்கிறோம். தமிழ் மொழியுடன் விளையாடாதீர்கள். மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி நிதியை கொடுங்கள். இல்லையென்றால், இந்த ஆர்ப்பாட்டம் போராட்ட களமாக மாறும். தமிழகம் முழுதும் போராட்டம் நடக்க வேண்டுமா, வேண்டாமா என்பது, மத்திய அரசின் கையில் உள்ளது. இதற்கு முன், தமிழக மக்களின் உரிமையை பறிக்க முயன்ற போதெல்லாம், பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் போது, 'கோபேக் மோடி' என, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த முறை பிரதமர் மோடி வந்தால், 'கெட்அவுட் மோடி' என தமிழக மக்கள் துரத்துவர். இவ்வாறு உதயநிதி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vasu
பிப் 19, 2025 08:26

அண்ணா, அடி பணிய வேண்டாம். தமிழகத்திற்கு மும்மொழியும் வேண்டாம், அந்த 2300 கோடியும் வேண்டாம். நம்மால் 2300 சம்பாதிக்க முடியாதா? தமிழக மக்கள், தமிழுக்காக, தமிழக மாணவர்களுக்காக, எந்த வரி உயர்வையும் ஏற்றுக்கொள்வார்கள்